கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்பு!

 அரியானா மாநிலத்தில் ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் ரிஷ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா தனது குழுவினருடன் பெண்ணை மீட்டுள்ளார்.

“ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கழிப்பறையில் பூட்டப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் எனது குழுவுடன் இங்கே வந்தபோது, அது உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம். பெண் பல நாட்களாக எதையும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது.” என ரஜினி கூறியுள்ளார்.

மேலும், “இந்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டவள் என கூறப்பட்டது. ஆனால், நாங்கள் அவளுடன் உரையாடியதிலிருந்து அது உண்மையில்லை என தெரியவந்தது. ஆனால், முழுமையாக நாங்கள் இதை உறுதி செய்ய முடியாது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளோம். காவல்துறை மேற்கண்ட நடவடிக்கையினை எடுக்கும்” என்றும் ரஜினி கூறியுள்ளார்.

இது குறித்து பெண்ணின் கணவர், “அவள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் பல முறை அவளை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், அவள் வரவில்லை. இது குறித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லையென” கூறியுள்ளார்.

“நாங்கள் மீட்கப்பட்ட பெண் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும், சம்பந்தப்பட்ட பெண் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்ததையடுத்து மருத்துவ உதவிகளை நாட அறிவுறுத்தியுள்ளோம். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.