கொரோனா காரணமாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை!

 


வவுனியா, இராசேந்திரம் குளம் பகுதியில் உள்ள மயானத்தில் வைத்தியசாலை மனிதக்கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்த போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் மக்கள் குடிமனைகளை அண்டியதாக காணப்படும் மயானத்தில் வவுனியா வைத்தியசாலையால் சத்திரசிகிச்சை மற்றும் உடல் கூற்று பிரேத பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது பெறப்படும் மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் அவை கொட்டப்படுவதால் விலங்குகள், காற்று, நீர் என்பவற்றின் காரணமாக அவை மக்கள் குடியிருப்புக்களில் பரவல் அடைவதாகவும் அதனால் தமக்கும் நோய் ஆபத்துக்கள் வரும் எனவும் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க இராசேந்திரம் குளம் மயானம் முன்பாக வந்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது என தடைவிதித்துள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பேணி ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்த போதும் தடை ஏற்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவ்விடத்திற்கு வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் விக்டர்ராஜ் அம் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதுடன், இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா வைத்தியசாலைப் பணப்பாளர் நந்தகுமார் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதுடன், மக்களும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.