மன்னாரில் கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி போராட்டம்!!

 


கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மன்னார்- கொக்குப்படையான் மீனவக் கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) காலை கொக்குப் படையான் கடற்கரைப் பகுதியில குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், “மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொக்குப் படையான் மீனவ கிராமங்கள் வேகமாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.

இதனால் அப்பகுதி கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து அழியும் நிலையில் உள்ள கிராமத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத் தரவேண்டும்.

கொக்குப்படையான் கிராம மக்களாகிய நாங்கள் கடற்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

இப்பகுதி சமீப காலமாக 300 மீற்றருக்கும் மேல் கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ளதோடு,  கடந்த 6 மாதங்களில் 45 மீற்றர் தூரம் கடலரிப்பிற்கு உள்ளானதை எமது கண்களினால் கண்டுள்ளோம்.

இப்பகுதி மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ள நிலையில் மிகவும் அவசரமாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

இதனை ஜனாதிபதி பிரதமர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் மற்றும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுத்து கடலரிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதி பிரதமர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் போன்றவர்களுக்கான அவசரக் கடிதத்தினை மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியேக செயலாளர் அன்ரன் டானியல் வசந்தனிடம் கையளித்துள்ளனர்.

மக்களின் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியேக செயலாளர் அன்ரன் டானியல் வசந்தன், கொக்குப்படையான் பங்குத் தந்தை அருட்தந்தை டெஸ்மன் அடிகளார், மீனவ சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.