முல்லைத்தீவில் பண மாபியாக்களிடம் பாடசாலை காணி சிக்கியதால் குடிசைகளில் கல்வியை தொடரும் மாணவர்கள்
இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்’ என்பது சான்றோர் கூற்று. ஆனால், தமது எதிர்காலத்தையே தொலைத்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தவிககிறார்கள் முல்லைத்தீவு பூதன்வயலை சேர்ந்த இம் சிறார்கள்.
தரம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட பூதன்வயல் கிராமத்தின் பாடசாலை அதற்கான பிரத்தியேகமான நிரந்தர இடமில்லாது பெரும் சிரமங்களிற்கு மத்தியில் இயங்கி வருவதாக தெரியவருகிறது.
பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியை பண பலம் படைத்த ஒரு தரப்பினர் தமக்கு சொந்தமானது என உரிமை கோரி வருவதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்ட போதிலும் பாடசாலைக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லையென பாடசாலை சமூகம் கவலை வெளியிடடுள்ளனர்.
பெற்றோரும் அதிபர், ஆசிரியர்களும் முன்னெடுத்த முயற்சியின் பலனாக பூதன்வயல் பொதுநோக்கு மண்டபத்திலும் திறந்தவௌியில் அமைக்கப்பட்ட ஓலைக் குடிசையிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர்ந்து வருகிறார்கள்.
அதிக பணம் செலுத்தி பிள்ளைகளை தனியார் வகுப்புகளுக்கு அனுப்ப முடியாத தினக்கூலி வேலைகளுக்கு செல்லும் பெற்றோர் தமது சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக குறித்த காணியை மீள பெற்றுத்தர வேண்டும் என அவர்களின் கல்வியில் அக்கறை கொண்டுள்ள அனைவரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


கருத்துகள் இல்லை