கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு!

 


ராகம, வெலிசர பகுதியில் பெருமளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கலால் திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கலால் திணைக்களத்தின் கொழும்பு கலால் சிறப்பு செயல்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 504,000 மி.லீ கசிப்பும், கசிப்பு வடிகட்ட பயன்படுத்தப்பட்ட பல செப்பு சுருள்கள், 10 பீப்பாய்கள் மற்றும் பல உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  அவற்றின் சந்தை பெறுமதி 500,000 ரூபாவை விட அதிகம் என  கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ் கசிப்பு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு கொழும்பு, தெமதகொடா, தொட்டலங்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், மிகவும் அசுத்தமாக காணப்படும்  குறித்த நிலையத்தில் கசிப்பு வடிகட்ட அமோனியம் கார்பனேட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெலிசர பகுதியில் வசிக்கும் 33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.