நடைபாதை வியாபாரத்தை தடைசெய்ய தீர்மானம்!


 சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இந்த  நடவடிக்கை சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றுவருகின்ற துணி வியாபாரம் தொடர்பாக அண்மைக்காலமாக சாவகச்சேரி நகரசபைக்கு வர்த்தகர்கள் மற்றும் உறுப்பினர்களால் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. குறிப்பாக நடைபாதை துணி வியாபாரத்தால் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும் அத்துடன் சுகாதார நடைமுறை பேணப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபை சபையில் ஆராய்ந்து எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியில் இருந்து நடைபாதை புடைவை வியாபாரத்தை சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் முற்றாகத் தடை செய்வதெனத் தீர்மானித்திருந்தது.

அத்துடன் கொரோனா அச்ச நிலைமை இல்லாவிடின் பண்டிகைக் காலங்களில் நகரசபையால் ஒதுக்கப்படும் இடங்களில் நடைபாதை புடைவை வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடைபாதை துணி வியாபாரங்களைத் தடை செய்வதனால் பல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்குவார்கள் எனவும், தையல் தொழிலில் ஈடுபடும் பல பெண்களுக்கு நடைபாதை துணி வியாபாரம் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.