நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் – வானிலை எச்சரிக்கை

 நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விசேட அறிவிப்பு : ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் 2020 ஒக்டோபர் 17ஆம் திகதி காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.