போராட்டத்திற்கும் வீடு தேடி புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (01) சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்ட இடத்திற்கு அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்து போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.
அதேவேளை நேற்று (30) இப் போராட்டத்திற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருக்கும்போது, இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் இரவு 08.45 மணியளவில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியின் வீட்டிற்கு சென்று, மிரட்டும்தொனியில் போராட்டம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்துள்ளனர்.
இது தொடர்பில் மரியசுரேஸ் ஈஸ்வரி கருத்துத் தெரிவிக்கையில்,
“பயங்கரமான அச்சுறுத்தலின் மத்தியிலே நாங்கள் இந்தப் போராட்டத்தினை மேற்கொள்கின்றோம். நாம் போட்டத்தினை மேற்கொள்ளும்போது, குறித்த இடத்திற்கு இராணுவப் புலானாய்வாளர்கள் மற்றும், பொலிஸார் அதிகளவில் வருகை தருவதால் எமக்கு ஒருவித அச்சம் ஏற்படுகின்றது.
எமது உயிருக்குக்கூட உத்தரவாதம் இல்லை. எம்மையும் கடத்துவார்கள் என்ற அச்ச நிலை காணப்படுகின்றது. இருப்பினும் கையளிக்கப்பட்ட உறவுகளையும், சிறார்களையும் விடுவிக்கும்வரையில் நாம் தொடர்ச்சியாகப் போராடுவோம். எம்மால் கையளிக்கப்பட்ட சிறார்களையாவது முதலில் எம்மிடம் கையளிக்க அரசு முன்வர வேண்டும். அதற்காகத்தான் நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.
பன்னாடுகளும் எமது இந்த போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். தற்போது எது போராட்டங்களுக்கு பலவழிகளிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
நேற்றையநாள் இப் போராட்டத்திற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருக்கும் போது, இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் எனது வீட்டிற்கு வருகைதந்து, என்ன போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளீர்கள் என மிகவும் கடுமையான தொனியில் என்னைக் கேட்டார்கள்.
இவ்வாறாக இந்த அரசாங்கத்தினால் பாரிய அளவில் எம்மீது அழுத்தங்கள் பிரையோகிக்கப்படுகின்றது. எனவே அரசாங்கம் இத்தகைய அச்சுறுத்தல் நிலைமைகளை எம்மீது பிரையோகிப்பதை உடன் நிறுத்த வேண்டும். அத்தோடு விசாரணைகளுக்கு அழைப்பது உள்ளிட்ட விடயங்களையும் நிறுத்த வேண்டும்.
மேலும் அடுத்த சிறுவர் தினத்திற்குள்ளாவது கையளிக்கப்பட்ட எமது சிறுவர்களைக் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றார். (246)
கருத்துகள் இல்லை