பொலிசாரிடம் சிக்காமலிருக்க மந்திரவாதியிடம் சென்ற கள்ளர்கள் – இலங்கையில் சம்பவம்

 அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை சம்பவமான, நீர்கொழும்பு வர்த்தகர் வீட்டில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட வழக்கில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணத்தை கொள்ளையிட்ட பின்னர் மந்திரவாதிகளிடம் சென்று, பொலிசாரின் பார்வை தம் மீது படாமலிருக்க பரிகாரம் செய்ய முயன்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு, கட்டான பகுதியில் 50 ஏக்கர் பகுதியில் வசிக்கும் ஒரு மில்லியனர் தொழிலதிபரின் வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையிட்டது.

துப்பாக்கிகளுடன் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் தம்மை சிஐடியினர் என அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டில் நுழைந்து கொள்ளையிட்டனர்.

கொள்ளைச் சம்பவத்திற்கு அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி போலியானது, கொள்ளையின் பின்னர் துப்பாக்கிகளை நீர்த்தேக்கத்திற்குள் எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இராணுவ கொமாண்டோ பிரிவில் பணியாற்றி விலகியவர். இன்னொருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர். வாகனம் திருத்தும் தொழிலில் ஈடுபடுபவர், வீட்டு பணிகளில் ஈடுபடுபவர்கள் ஏனையவர்கள்.

வீட்டுக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியிலீடுபடுபவரை பிடித்து, தம்மை சிஐடியென மிரட்டி வீட்டுக்குள் நுழைந்தனர்.

வர்த்தகரிடம் 300 இலட்சம் ரூபா பணம் கப்பம் கோரியுள்ளனர். அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையென கூறியபோது, அவர்களை அறைக்குள் பூட்டி வைத்து, வீட்டில் அலுமாரிகளை உடைத்து கொள்ளையிட்டனர்.

92 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் என 3 கோடி ரூபா பெறுமதியானவை கொள்ளையிடப்பட்டன.

திருட்டு முடிந்ததும், தொலைபேசி வழியாக தனியார் பஸ் ஒன்றை வாடகைக்கு அழைத்து, அதில் ஏறி சென்றுள்ளனர். மினுவாங்கொட பகுதியிலுள்ள வழிபாட்டிடமொன்றிற்கு சென்று பூஜை செய்து, தம்மை பொலிசாரின் பார்வையிலிருந்த தப்பிக்க மந்திரவித்தைகள் செய்ய கோரியுள்ளனர். பின்னர் பேருந்து நிலையத்தில் இறங்கி, பிரிந்து சென்றனர்.

பொலிசார் நடத்திய விசாரணையின் பின் சீதுவை, நிக்கரவெட்டிய, வீரவில பகுதிகளில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 73 மில்லியன் ரூபா பணம், நகை மீட்கப்பட்டது.

கொள்ளையடிப்பதற்கு அவர்கள் கார் ஒன்றை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். கம்பஹா, மொரகொட பகுதியிலுள்ள ஒருவரிடம் காரை பெற்றனர். மரணவீடு ஒன்றிற்கு செல்வதாக கூறியே காரை பெற்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவ தகவல் வெளியானதும், தனது காரே கொள்ளையர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை கார் உரிமையாளர் அறிந்து கொண்டார். அது குறித்து கொள்ளையர்களுடன் அவர் தொலைபேசியில் வினவியுள்ளார்.

கார் வாடகைக்கு தந்தவர் விடயத்தை அறிந்து கொண்டு விட்டார் என்று தெரிந்து கொண்டதும், விடயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க அவருக்கு 1.1 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் என்பன எப்பாவல பகுதியிலிருந்து மீட்கப்பட்டன.

பிரதான சூத்திரதாரியும், மேலும் 3 பேரும் எஞ்சிய பணம், நகையுடன் தலைமறைவாகியுள்ளனர்.Blogger இயக்குவது.