தென்மராட்சி சிறுவரால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள்!



தென்மராட்சி சிறுவர்கள் இருவரால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் இன்று (19) சாவகச்சேரி நகராட்சிமன்ற பிளாஸ்ரிக் மீளுருவாக்கல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் உக்காத கழிவுப் பொருட்களை சேகரித்து மீள் சுழற்சி முறையில் மீளுருவாக்கம் செய்யும் நிலையம் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி தரம் 6 மாணவன் ந.அபர்னன், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி தரம் 5 மாணவன் அ.கரிஷ்யதுர்சன் ஆகியோர் இணைந்து தமது வீட்டு சுற்றாடலிலும்,

கிராமத்திலும் சேகரித்த ஒருதொகுதி பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை குறித்த நிலையத்திற்கு சென்று நகராட்சி மன்றப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பி.தளிர்றாஜ் முன்னிலையில் கையளித்தனர்.

தமது வீட்டு சுற்றாடலையும், கிராமத்தையும் பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் அற்ற சுகாதார பிரதேசங்களாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கும் அச்சிறுவர்கள்,

தம்மை போன்று ஏனைய சிறுவர்களும் தமது வீட்டு சுற்றாடலில், கிராமத்தில் உள்ள இத்தகைய கழிவுகளை சேகரித்து இங்கு கையளிக்கலாம் என்று அச்சிறுவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் இந்த உக்காத கழிவு சேகரிப்பு நிலையத்தில் கழிவுகளை கையளித்து,

அங்கு வழங்கப்படும் கழிவு சேகரிப்பு கூப்பன்களை நிரப்பி ஊக்கத் தொகையை பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.