கண்ணீர் சிந்திய அதிபரைப் பார்த்து வியக்கும் வடகொரிய மக்கள்!!!

 


கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தொடர்ந்து மற்ற நாடுகளைப் பயமுறுத்தும் அளவிற்கு அணு ஆயுதப் பரிசோதனை, அளவுக்கு அதிகமாக ஆயுதக் குவிப்பு என ஒட்டுமொத்த உலக நாடுகளையே பதறவைக்கும் செயல்களை செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடைய ஆற்றிய ஒரு உரையில் கண்கலங்கி அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு இருக்கிறார். இந்தச் சம்பவம் வடகொரியா மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


அதிபர் கிம் ஜாங் உன் தற்போது ஆட்சியில் இருந்து வருவதற்கு காரணமான தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டுவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் வழக்கத்திற்கு மாறாக நாட்டு மக்களிடையே உருக்கமாக பேசியிருக்கிறார். அதோடு மேலும் ஒரு முக்கியமான விஷயத்தையும் அவர் தெரிவித்து இருக்கிறார். அதாவது உலகில் வேறு எந்த நாடுகளிடமும் இல்லாத ஒரு ஆயுதத்தை வடகொரியா தயாரித்து இருக்கிறது. இதன்மூலம் அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக இருந்து வரும் கருத்து முரணுக்கு விடிவு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.


வடகொரியா அதிபரின் இந்த கருத்தால் தற்போது உலக நாடுகளிடையே மேலும் பதட்டம் அதிகரித்து இருக்கிறது. கடந்த 1960 முதல் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில் ஒபமா அதிபராகப் பதவிவகித்த போது வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முற்பட்டார். ஆனால் இறுதியில் அதுவும் கனவாகவே போய்விட்டது. தற்போது அமெரிக்க அதிபராக இருந்து வரும் ட்ரம்ப் வடகொரியாவிற்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர் என்பதால் இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள் மேலும் அதிகரித்து வருகின்றன.


இந்நிலையில் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டு மக்களிடம் “எங்கள் மக்கள் வானத்தை விட உயரமான அளவிற்கும், கடல் போன்ற ஆழம் அளவிற்கும், என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் நான் அவர்களுக்கு திருப்திகரமான வகையில் வாழத் தவறிவிட்டேன். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பை நம்புவதா என்றே அந்நாட்டு மக்கள் குழப்பம் அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.


காரணம் ஒட்டுமொத்த உலக நாடுகளிடையே மட்டுமல்லாது சொந்த நாட்டு மக்களிடமும் ஒரு சர்வாதிகாரியாகவே காட்சி அளித்த அதிபர் திடீரென்று கண்ணீர் சிந்தி இருக்கிறார். இதனால் மக்கள் மேலும் குழம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதற்கு தற்போது வடகொரிய அதிபரும் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.