56 பேருக்கு மன்னாரில் பீ.சி.ஆர்.பரிசோதனை!!

 


பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.


இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பேலியகொட மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 56 பேருக்கு கடந்த வியாழக்கிழமை பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பீ.சி.ஆர்.பரிசோதனையின் மாதிரிகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.


மேலும் வவுனியா மாவட்டத்தில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தொடர்ந்து, மன்னார் மாவட்டத்திலும் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு குறிப்பாக வவுனியா- மன்னார் எள்ளை பகுதியான கல்மடு பகுதியில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்று  பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


சுமார் 54பேருக்கு குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களது மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளையும் எதிர்பார்த்துள்ளோம்.


மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 7ஆம் திகதி முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 1 ஆம் 2 ஆம் நிலை தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகள் அனைத்தும் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவை தந்தமையினால், தனிமைப்படுத்தப்பட்டவர்களில் அவரோடு தங்கி இருந்து வேலை செய்தவர்களை தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


வேலைத்தளத்தில் இருந்தவர்களுக்கான பீ.சி.ஆர்.பரிசோதனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற்று அவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.


பட்டித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் 9பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் ஒருவர் குணமடைந்து இரணவல வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்ப இருக்கின்றார்.


கடந்த முதலாம் திகதி முதல் இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 939 சமூக பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற பீ.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டவை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.