கொரோனாவால் பலியான அமைச்சர் துரைக்கண்ணு!


 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு (72) சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த 13ம்தேதி, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விக்கிரவாண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின், உயர் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. நுரையீரல் பாதிப்பால், மூச்சுத் திணறல் இருந்ததால், வென்டிலேட்டர் வாயிலாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராத நிலையில், தற்போது அதற்கு அடுத்தபடியாக, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவுக்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து முக்கிய உடல் உறுப்புகள் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று (31) இரவு 11.15 மணியளவில் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் 1948ஆம் ஆண்டு பிறந்த துரைக்கண்ணு, பாபநாசம் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் அவருடைய உருவப் படத்திற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். ‛அமைச்சர் துரைக்கண்ணு கட்சிக்காக பாடுபட்டவர். அவருடைய இழப்பு வேதனை அளிக்கிறது. அவர் எளிமையானவர் எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர்’ என்று முதல்வர் பழனிசாமி புகழாரம்.

அவருடைய உடல் சொந்த ஊரான ராஜகிரிக்கு எடுத்துச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.