கடற்கரும்புலி கப்டன் இன்னிசை!

 

என்இனிய தமிழீழ மக்களுக்கு...


நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள்.

இப்படிக்கு
போராளி இன்னிசை
1996.05.16

ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம் பெயர்ந்தது. இந்த இடப்பெயர்வுதான் இவளுள் போராட்ட உணர்வை விதைத்தது. வீட்டிலே மூத்தவள் இவள். பின்னால் ஆறு பேர். குடும்பப்பொறுப்பு அவளை இழுத்துப் பிடித்தாலும், வீட்டார்மேல் அவளுக்கிருந்த பாசமே நாளடைவில் அவளைப் போராடத் தூண்டியது.

1992இல் கடற்புலிகள் மகளிர் படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமில் இன்னிசைக்கும் பாரதிக்கும் இடையில்தான் பயிற்சியில் போட்டி. இருவரும் நல்ல நண்பிகள். ஆனால் எதிலும் போட்டிதான்.

பயிற்சி முடிந்ததும் மருத்துவப் போராளியாகக் கடமையாற்றிய போதே நீச்சற் பயிற்சியையும் எடுத்தாள். எந்த நேரமும் சண்டைக்குப் போகக்கூடிய தயார் நிலையில் தன்னை வைத்திருந்தாள். மருத்துவ முகாமிலே மருந்துகளை விட இன்னிசையின் கதைதான் காயங்களை, நோயை விரைவில் ஆற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்.

கரும்புலியாகப் போகும் தன்விருப்பத்தைத் தெரிவித்து, நளாயினி படையணிக்கு வந்ததும் பாரதியை மீண்டும் சந்தித்தாள். இடையிலே பிரிந்த தோழிகள் தமது இலக்கினால் மீண்டும் ஒன்றாகினார்கள்.

தனது படகைத் தானே கழுவுவாள். தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே செய்து கொள்வாள். தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு எது தெரியாதோ, அதைச் சொல்லிக் கொடுப்பாள். தன்னைப் போலவே எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்று விரும்புவாள்.

இரவு நேரங்களில் தென்னை மரங்களில் ஏறி, தேங்காய் திருடி இளநீர் குடிப்பதைப்போல் அவளுக்கு சுவாரசியமான விடயம் வேறொன்றுமில்லை.

கரும்புலியாகப் போகும் போது, ஒரு பெண் போராளியுடன் போவதுதான் தனது விருப்பம் என்று பொறுப்பாளரிடம் அடிக்கடி சொல்வாள். வெடிமருந்தேற்றிய படகுடன் கடலில் அலைந்து விட்டு, இலக்குக் கிடைக்காமல் திரும்பும்போது தோழிகளின் அபாரமான அறுவைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

”இந்தமாதிரி இழுபடுகிறாய். இனி உனக்குத் தொண்ணூற்றி ஏழில்தான் சான்ஸ்”

1996-07-19 ஓயாத அலைகள் தாக்குதலின் இரண்டாம் நாள், மிதுபாலனையும் இன்னிசையையும் சுமந்த கரும்புலிப் படகு ‘ரணவிரு’வுடன் மோதியது.ஏதோ பிசகி விட்டது. படகு வெடிக்கவில்லை. ‘ரணவிரு’வின் எதிர்த்தாக்குதலால் இன்னிசை காயமுற்றாள். தவிர்க்கமுடியாமல் இருவரும் கரை திரும்ப நேரிட்டது. இன்னிசை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 1996-07-24 அன்று மிதுபாலன், சயந்தனுடன் போய் மற்றொரு தரையிறங்கு கப்பலைத் தாக்கி காவியம் படைக்க, தனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற கவலை அவளை வாட்டியது.

இன்னிசைக்கும் பாரதிக்கும் இலக்குக் கொடுக்கப்பட்டபின்னர், அவள் தன் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனாள். நோயால் வாடியிருந்த தாய் மகளை வீட்டுக்கு வந்து குடும்பப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டாள். இன்னிசை மெல்லச் சிரித்தாள்.

”கொஞ்ச நாளில வருவன் அம்மா”

நீண்ட கால அலைச்சலின் பலன் 1996-11-11 அன்று அதிகாலை இன்னிசைக்குக் கிட்டியது. காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகுமீது இன்னிசையையும் பாரதியையும் சுமந்த படகு பாய்ந்தது.

தன் மகள் கடைசியாகத் தனக்குச் சொன்ன வரிகளின் பொருள் அப்போதுதான் அந்தத் தாய்க்குப் புரிந்தது.

இன்னிசை தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடைசிக் கடிதத்திலிருந்து ஒரு கவிதை:

நீலக்கடல் வற்றினாலும்
என் மழலைச் சகோதரர்களின் முகங்கள்
என் மனதில் அலை மோதுகின்றது
நிலவு வந்து ஒளிபரப்புகின்ற நேரத்தில்
என் பெற்றோர் அரவணைத்த
பாசப் பிணைப்பு
நெஞ்சத்தில் ததும்புகின்றது.

நெஞ்சம் மறப்பதில்லை (12.02.1997) காவியத் தொகுப்பிலிருந்து.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.