மட்டக்களப்பில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு! தீர்வைக்கோரும் விவசாயிகள்!

 


 மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் தாழ் நிலப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் 6 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.


எனவே முகத்துவாரம் ஆற்று வாயை வெட்டி நீரை கடலுக்கு வெளியேற்றுமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ள எருமைத்தீவு, திமிலைத்தீவுகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (10) படகில் ஊடகவியலாளர்களை விவசாயிகள் அழைத்து சென்று வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல் பிரதேசங்களை காட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


மட்டக்களப்பு ஆற்றுவாயில் நிரம்பியுள்ள நீரை முகத்துவாரம் ஆற்றுவாயினனை வெட்டி கடலுக்குள் வெளியேற்றுமாறு அரசாங்க அதிபரிடம் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்ததையடுத்து  திங்கட்கிழமை இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள், மீனவர்கள் அழைக்கப்பட்டு கூட்டம் இடம்பெற்றது.


இந்த கூட்டத்தில் இது தொடர்பாக 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குழுவினர் இரு நாட்களில் வழங்கும் அறிக்கையின் பின்னர் இதற்கு நிரந்தரமான தீர்வை பெறமுடியம் என மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.


இருந்த போதும் செங்கலடியில் இருந்து மண்டூர் மற்றும் நாவிதன்வெளி, கட்டங்கி வரையாக ஆற்றை அண்டிய பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது.


இது காலம் காலமாக விவசாயம் செய்துவந்த காணிகள் இதற்கு முன்னர் விவசாயிகளே சென்று இந்த ஆற்றுவாயை வெட்டி வந்தார்கள்.


இது இப்பொழுது அரசியல் மயமாக்கப்பட்டு அதிகாரிகளின் கைகளில் கிடைக்க பெற்ற காரணத்தினால் எங்களுடை விவசாய நடவடிக்கைகளை கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே கிட்டத்தட்ட 1500 குடும்பங்கள் பாதிக்கப்படுள்ளது. இவர்கள் அனைவரும் வங்கியில் கடன் பெற்று கொரோனா காலத்தில் தங்க ஆபரணங்களை அடகுவைத்துதான் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.


அதனால் இந்த அதிகாரிகள் அசமந்த போக்கை விட்டுவிட்டு இந்த ஆற்று வாயை உடனடியாக வெட்டித்துருமாறு கேட்கின்றோம். இல்லாவிடில் எங்களுடைய கையில் தாருங்கள் விவசாயிகளான நாங்களே சென்று அதனை வெட்டுவோம். அது ஒரு மூன்று மணித்தியாலத்து வேலை, இந்த வேலையை செய்வதற்கு அதிகாரிகள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.


இப்படி செய்து கொண்டிருந்தால் இன்றைய உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 3 வீதமான நெல் அழிவடையும். எங்களுடைய விவசாயம் மீளவேண்டுமாக இருந்தால் இதை உடனடியாக செய்ய வேண்டும்.


இது தொடர்பாக விவசாய அமைச்சர், ஏனைய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனவே இவர்கள் உடனடியாக ஆற்றுவாயை வெட்டி நீரை வெயியேற்றிதருமாறு கேட்டுக் கொள்வதுடன் இந்த ஆற்று வாயில் சரியான தடுப்பனை போடக் கூடியதாக இருந்தால் உவர் நிலமாக இருக்கின்ற 10 ஆயிரம் ஏக்கர் நிலம் வேளாண்மை செய்யக் கூடிய நிலமாக மாற்றப்படும் எனவே இதனை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரிசனை கொண்டு இதற்கு நிதியை ஒதுக்கி இதனை சரியான முறையில் வழிநடத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.