தான் நியமித்த உயரதிகாரியையே பதவி நீக்கினார் ட்ரம்ப்!


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறும் ஜனாபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துடன் முரண்படும் வகையில் கருத்துத் தெரிவித்த இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (Cyber Security and Infrastructure Security – Cisa) தலைவரான கிறிஸ் க்ரெப்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ட்ரம்பால் நியமிக்கப்பட்ட கிறிஸ் க்ரெப்ஸ், வாக்காளர் நம்பிக்கை குறித்து தெரிவித்த தகவல்கள் மிகவும் துல்லியமற்றதாக இருந்ததால் அவரைப் பதவி நீக்கிவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான கிறிஸ் க்ரெப்ஸ், இந்த பதவிப் பறிப்பைப் பார்த்து வருத்தப்பட்டதாக தெரியவில்லை.

கடந்த அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு முகமைக்கு க்ரெப்ஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலைவராக இருந்து வருகிறார்.

தேர்தலில் இணையத் தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் அதிகாரிகளோடும், வாக்கு இயந்திரங்களை அளிக்கும் தனியார் நிறுவனங்களோடும் இணைந்து பணியாற்றுகிறது இந்த முகமை. வாக்குச்சீட்டு பட்டியலிடும் பணி உள்ளிட்டவற்றையும் இது கவனிக்கிறது. தமது முகமை சார்பில் தேர்தல் தொடர்பான பொய்த் தகவல்களை அம்பலப்படுத்தும் வகையில் ஒரு இணைய தளத்தை நடத்தி வந்தார் க்ரெப்ஸ்.

பல மாநிலங்களில் வாக்கு இயந்திரங்கள் வாக்குகளை பிடனுக்கு சாதகமாக மாற்றிப் பதிவு செய்ததாக ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டை மறுத்து, நேரடியாக ட்ரம்புடன் முரண்படும் வகையில் அவர் ஒரு ட்வீட் வெளியிட்டார். அது வெளியான சில மணி நேரங்களில் க்ரெப்சின் பதவி பறிபோயுள்ளது.

ட்ரம்ப், ஜனவரியில் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு சி.ஐ.ஏ. இயக்குநர் ஜீனா ஹேஸ்பெல், எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே ஆகியோரும் பதவி நீக்கப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தமது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்துவரும் ட்ரம்ப், முன்பே பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பரை பதவி நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.