வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்!


வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை கூட்டத்தினை கூட்டுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்தும் இதுவரை நிருவாக ரீதியாக எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதன் பின்னால் அரசியல் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு திட்ட பிரேரனைக்கு இன்று சபைக்கு வருகை தந்த சபை உறுப்பினர்கள் பிரேரனை கூட்டத்தினை நடாத்தாமை காரணமாக சபை முன்பாக ஒன்றிணைந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச சபை உறுப்பினர்களை அச்சுறுத்துவதாகவும், பொலிஸாரை குவித்து எங்களை அச்சுறுத்துவதாகவும் பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் தெரிவித்தார்.

பிரதேச சபையில் 38 உத்தியோகத்தர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். ஆனால் 23 சபை உறுப்பினர்களை வைத்து பிரேரனையை நடாத்த துணிவில்லாமல் அச்சம் கொள்கின்றார். இவ்வாறு உள்ள தவிசாளர் இராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்

முறைகேடான தன்மை, உறுப்பினர்கள் மற்றும் மக்களை மதிக்காத தன்மை கடந்த காலங்களில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் இயங்கும் தவிசாளரினால் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் சேவைக்கு தவிசாளரும், செயலாளரும் இங்கு இல்லை என்றும், இருவரும் ஓடி ஒளிப்பதற்காகவா பிரதேச சபையின் நடவடிக்கை இருக்கின்றது என மக்கள் கேள்வி எழுப்புகின்றதாகவும் கி.சேயோன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தவிசாளர் சபையில் இல்லாமல் ஓடி ஒளிகின்றார். இது திருடன் பொலிஸ் விளையாட்டு போன்று உள்ளது. மக்களே விளங்கிக் கொள்ளுங்கள் இதில் யார் திருடன் யார் பொலிஸ் என்று என தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் தெரிவித்தார்.

சபையின் சொத்துக்களை எவ்வாறு களவாடலாம் என களவாடும் அணியுடன் சேர்ந்து சபையிளை களங்கப்படுத்தி, வரவு செலவுத் திட்டத்தினை கொண்டு செல்ல முடியாமல் தவிசாளர் ஓடியுள்ளார். மக்கள் நலன்களையும் தூக்கி குப்பையில் எறிந்துள்ளார். சபை உறுப்பினர்கள் இங்கு வந்த சமயத்தில் புலானாய்வினர் மற்றும் பொலிஸாரை கொண்டு எங்களுக்கு அச்ச நிலையை ஏற்படுத்துகின்றார்.

சபைக்குட்பட்ட பகுதியில் குத்தகையினை மேற்கொண்ட பிள்ளையானின் ஆதரவாளர்கள், உறவினர்கள் சபைக்கு அதிகமான நிதியை செலுத்த வேண்டி உள்ளது.

இவை மிகவிரைவில் வெளிவரும். சபையில் பல இலட்சக்கணக்கில் குத்தகை ஊழல் இடம்பெற்றுள்ளது. இவர்கள் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் சகாக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதாலும் இந்த சபையில் தொடர்ச்சியான ஊழல் இடம்பெற்று வருகின்றதாகவும் தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை வெற்றி பெற வைப்பதற்கு பிள்ளையான் சகோதரர் அகிலா பதினைந்து உறுப்பினர்களை துரத்தி அச்சுறுத்தல் செய்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி தெரிவித்தார்.

ஆதரவு வழங்கும் பட்சத்தில் பணம் வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், அபிவிருத்திகள் செய்து தருவதாகவும் எமது உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார்.

இதனை நிரூபிக்க வேண்டுமானால் சில பகுதியில் வீதிகள் அவசரமாக எந்த அனுமதியும் இல்லாமல் தங்களது நெருங்கியவருடன் இணைந்து புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சபை உறுப்பினர்களின் அனுமதியை பெறாமல் தவிசாளர் பணங்களை செலவு செய்துள்ளார். இவர் சபையில் ஊழல்களை செய்துள்ளார் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த ஊழலை ஒழிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஓட்டமாவடி பிரதேச சபையின் கடையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மிரட்டியதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கூட்டத்தினை கூட்டுமாறு மாகாண உள்ளுராட்சி அணையாளருக்கு நேற்று மகஜர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று சபை உறுப்பினர்கள் தொலைபேசியூடாக நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரின் பிரகாரம் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் வழங்குமாறும், ஒத்திவைக்கப்பட்டு பதினான்கு நாட்களுக்குள் மீளவும் சபை கூட்டப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.மணிவண்ணன் தெரிவித்ததை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் கலைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.