மன்னாரில் நால்வருக்கு கொரோனா!


மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது நால்வருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள்.

இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்தில் இருந்து வருகை தந்து வரையாறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும்,சமூகத்திற்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

வருகை தந்தவர்களில் 6 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 3 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்பாக இருந்த , அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்களாக 18 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

நான்காவது தொற்று உடையவர் இரணை இலுப்பைக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 21 ஆம் திகதி, கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு பேரூந்து மூலம் வருகை தந்து வவுனியாவில் இருந்து முச்சக்கர வண்டியூடாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் இவரும் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவருடன் தொடர்பில் இருந்த 5 பேர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 1286 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு குறித்த 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 423 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் இருவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஏனைய 13 பேரூம் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

தற்போது தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 4 பேரூம் கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் சிகிச்சை முடிவடைந்து டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியளவில் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

இதேவேளை மீனவ சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீன்களை சமைக்கும் போது சுடு நீரில் கழுவி மீனை உபயோகித்த கைகளை தொற்று நீக்கிகள் மூலம் கழுவுவதன் மூலம் மீன்களினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றுக்களை நாங்கள் தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மீன்களை உண்ணக்கூடாது என நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.