சுகாதார வழிமுறைகளின் படி தீபாவளி கொண்டாடும் இந்துக்கள்!


அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் தீபாவளி பண்டிகையை உலக ழுழுவதும் உள்ள இந்து மக்கள் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகின்றனர்.

அதேபோன்று, இலங்கையிலுள்ள இந்து மக்களும் தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக இன்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், வவுனியாவில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி வழிபாடுகள் ஆலயங்களில் இடம்பெற்றன.

சுகாதார திணைக்களத்தின் பணிப்பின் பெயரில் குறிப்பிடத்தக்க அளவான பக்தர்கள் மாத்திரமே ஆலயத்தில் அனுமதிக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்திலும் பிரதமகுரு க.கணேஸ் குருக்கள் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கெளரி விரத பூஜைகளும் இடம்பெற்றிருந்தன.

அதேபோன்று, மலையகத்திலும் தீபாவளி பண்டிகை மிகவும் எளிய முறையில்  இந்து மக்களினால் கொண்டாடப்படுகின்றது.

கொரோனா அச்சம் காரணமாகவே மலையகத்திலுள்ள இந்து மக்கள், இம்முறை தீபாவளி பண்டிகையை மிகவும் எளிய முறையில் கொண்டாடுகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பிலும் கொரோனா அச்சம் காரணமாக மிகவும் எளிய முறையில் தீபாவளி பண்டியை இந்து மக்களினால் கொண்டாடப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது.

இவ்வாறு மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை என தமிழ் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.