தமிழர் பண்பாட்டில் கள் - கட்டுரை


திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்சாரம் குறித்து விவாதிப்பது தற்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கும்.


சங்ககாலத்தில் ‘கள்’ தேறல், தோப்பி, கள், என்று பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. இது தேன், நெல்லரிசி, பழங்கள், பனைமரம் போன்றவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. நீண்ட நாட்கள் வைத்திருந்து உண்ணும் கள் தரும் போதையை “தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்” (புறம்: 392) என்பதால் அறியமுடிகிறது. அதாவது, தேள் கடித்தால் ஏறும் விடத்தைப்போன்று இக்கள்ளானது போதையைத் தரும் என்ற பொருளில் இவ்வடி வருகின்றது. “பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண்: 237) அடங்கிக் கிடக்கும் பாம்பு ஞெரேலெனச் சீறி எழுவது போன்று, உண்டவுடன், உண்டவர் உள்ளத்தில் வெறியை, களிப்பை ஏற்ற வலிய தன்மை உடையது என்னும் பொருளில் இவ்வரி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. “பாம்புக் கடுப்பன்ன தோப்பி” (அகம்.378), “அரவு வெகுண்டன்ன தேறல்” (புறம்.379) என்ற வரிகளும் கள்ளின் வீரியத்தைக் குறித்து நிற்பதைக் காணலாம். மேலும் கள்ளினை நீண்ட நாட்கள் வைத்துக் குடிக்கின்ற வழக்கத்தினை “பழம்படு தேறல்” (சிறுபாண்: 159) என்னும் சிறுபாணாற்றுப்படை பாடல் வரியால் அறியமுடிகிறது.

“கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாள்ஆ தந்து, நறவுநொடை தொலைச்சி” (பெரும்பாண்.140-141)
என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள், பகை மன்னருடைய ஆவினைக் கவர்ந்து வந்த வீரன் ஒருவன் அதனைக் கொடுத்துத் தனது பழைய கள்விலைக் கடனைத் தீர்த்ததைக் குறிப்பிடுகின்றது. மேலும், “குற்றாத கொழியல் அரிசியை நல்ல களியாகத் துழாவி அட்ட கூழை, மலர்ந்த வாயையுடைய தட்டுப்பிழாவில் இட்டு உலரும்படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கண் கிடக்கும் பழஞ்சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல நெல் முளையை இடித்து அதனை அதிலே கலந்து, அஃது இனிமை பெறும்படி இரண்டு பகலும் இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரில் வேகவைத்து நெய்யரியாலே வடிகட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்” என்று கள் தயாரிக்கும் முறையினை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்: 275 - 282) குறிப்பிடுகின்றது. தமிழர்கள் கள் தயாரித்த முறையினையும், அதை உருவாக்கிப் பருகுவதில் இருந்த அவர்களின் விருப்பத்தினையும் இதனால் உணர்ந்துகொள்ள முடிகிறது. மூங்கில் குழாய்களில் தேனினை நிரப்பித் தேறல் என்னும் மதுவகையினைத் தயாரித்துள்ளதை “வேய்ப் பெயல் விளையுள் தாகட் தேறல்” (மலைபடு.171) என்று மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. கள் உண்பவர் பலரும் செல்லும் மனைகளில், சிறந்த கள்ளின் விலையை எடுத்துக் காட்டும் கொடிகள் பறந்தது என்பதை, 
“பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு” (பட்டினப்.179-180)
என்ற பட்டினப்பாலை அடிகள் குறிப்பிடுகின்றன.

பெண்களும் சங்ககாலத்தில் கள்ளுண்டு மகிழ்ந்துள்ளனர் என்பதை “தாம் உடுத்திய பட்டாடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கென மெல்லிய வெண்ணிறத் துகிலை உடுத்துவர். கள் உண்டலைக் கைவிட்டு, இனிய காமபானத்தை விரும்பி உண்பர். மதுவின் மயக்க மிகுதியால், மகளிர், தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்துத் தங்கள் கூந்தலில் சூடிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர், தங்கள் கண்ணியாக நினைத்துத் தங்கள் தலையில் சூட்டிக் கொள்வர்” (பட்டினப்.107-110) என்னும் கூற்றால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் இரவெல்லாம் இவ்வாறு கள் குடித்தும், களவியில் ஈடுபட்டும் இருக்கும் பெண்கள் இரவின் கடையாமப் பொழுதில் துயில் கொள்ளுவர் என்று குறிப்பிடுகின்றது பட்டினப்பாலை.

கள் விற்கப்படும் மனைகளில் அதன் விலையுடன் கூடிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன என்பதை,

“பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு” (பட்டினப்.179-180)
என்ற பட்டினப்பாலையடியால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கள் விற்கும் இடங்களில் கொடி பறந்து கொண்டிருந்ததை, “கட்கொடி நுடங்கும் ஆவணம்” (பெரும்பாண்.337) “கட்கொடி நுடங்கும் ஆவணம்” (பதிற். 98:10), “நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்” (அகம் 126:10), “கள்ளின் களிநவில் கொடி” (மதுரைக். 372) என்னும் பாடல் வரிகளால் அறியமுடிகிறது. மேலும் களிப்பினைத் தரும் கள்ளிற்கு விலை கூறி விற்றதைக் “கள்ளோர் களி நொடை நுவல” (மதுரைக்.662) , “களம் தோறும் கள் அரிப்ப” (மதுரைக்.753) என்னும் மதுரைக்காஞ்சி பாடலடிகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு கள், அவற்றை உற்பத்தி செய்யும் முறை, விற்பனை செய்யும் இடம், கள் குடித்த மக்கள் என்று பல்வேறு தகவல்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து பெறமுடிகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமுதாயத்தில் மன்னர் முதற்கொண்டு விளிம்புநிலை மக்கள் வரை கள் குடித்திருக்கின்றனர் என்பது ஒருபுறமிருந்தாலும், அவர்கள் குடிப்பதெற்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அக்காலத்தில் குடி கலாச்சாரத்தால் எந்தக் குடும்பமும் சீரழிந்ததாகத் தெரியவில்லை. கவிஞர்களும், கலைஞர்களும், பெண்களும் கள் குடித்துள்ளனர். அதியமான் ஒளவைக்கு கள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறான். இது பெண்களும் பாகுபாடின்றிக் கள் குடிப்பதற்கு இருந்த சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகின்றது. சங்ககாலத்தில் கள் உணவாகப் பார்க்கப்பட்டது. அது இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்டது. எந்த வகையிலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதது. அது அவர்கள் செய்யும் தொழிலை முடக்கிப்போடவில்லை. அப்படியா இருக்கின்றது இன்றையநிலை. முற்றிலும் இல்லை என்றுதான் கூறமுடியும்.


ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்

1. அகநானூறு - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2. பத்துப்பாட்டு - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

3. பதிற்றுப்பத்து - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

4. புறநானூறு - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.