இந்தியாவில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் எம்.எல்.ஏ


இந்தியாவின் பீகார் தேர்தல் முடிவுகள் பல பாடங்களை உரக்க சொல்லியுள்ள அதேநேரத்தில், பல தலைவர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டியுள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் வரிசையில், பீகார் தேர்தலில் தனித்தன்மை வாய்ந்த தலைவராக உருவெடுத்துகிறார் சி.பி.ஐ (எம்-எல்) கட்சியைச் சேர்ந்த மெஹபூப் ஆலம்.

பல்ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மெஹபூப் ஆலம்தான் பீகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற எம்.எல்ஏ. ஏற்கெனவே மூன்று முறை எம்.எ.ல்ஏ ஆக இருந்த இவர், தற்போது நான்காவது முறையாக சட்டமன்றம் செல்கிறார்.

பீகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதால், தற்போது வெளியுலகுக்கு இவரைப் பற்றி தெரிகிறது. இவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,04,489. வாக்கு வித்தியாசம் 53,597. ஆனால், பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் இவர் 'மக்கள் தலைவர்'.

அடிப்படையில் மார்க்சியவாதியான ஆலம், 3 முறை எம்எல்ஏவாக இருந்தும் இவருக்கு என்று சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டில் அதுவும், சிவானந்தபூர் என்ற குக்கிராமத்தில் 800 அடியில் ஒற்றை அறை கொண்ட வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அத்துடன் , இவரின் சொத்து மதிப்பு வெறும் 1 லட்ச ரூபாய் மட்டுமே. இதை தனது தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார் ஆலம்.

ஆலம் பரம்பரையில் அனைவருமே படிப்பறிவு உள்ளவர்கள். இவரும் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இளம் வயதில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மற்றவர்களைப்போல இல்லாமல், இளம் வயதில் ரிக்‌ஷா ஓட்டி, ரிக்‌ஷாக்காரர்கள் சங்கத்தில் சேர்ந்து அந்த அமைப்பில் உள்ள அரசியல் நுணுக்கங்களை கற்று அதன் மூலம் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ளார்.

1985-ல் சி.பி.ஐ(எம்) வேட்பாளராக தனது தேர்தல் அரசியலை பார்சோய் தொகுதியியல் இருந்து தொடங்கினார் ஆலம். அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், அதன்பின் வந்த தேர்தல்களில் வெற்றியை பெற்று வருகிறார்.

அரசியலில் வெற்றி, தோல்வி என மாற்றி மாற்றி வந்தாலும் தன் மக்கள் பணிகளை விடாமல் செய்து வருகிறார் ஆலம்.

முஹரம் ஊர்வலத்தின்போது குச்சிகளால் அடித்துக் கொண்டது, வங்கி மேலாளரை அறைந்தது, கட்சி விட்டு கட்சி மாறுவது என பல சர்ச்சைகளும் ஆலமை சுற்றி வட்டமடிக்கின்றன. இதைவிட ஒரு கொலை வழக்கும் இவர் மேல் இருந்தது. 1995-ல் சிலர் ஒரு தலித் குடியிருப்பைத் தாக்கி ஒரு குளத்தை கைப்பற்ற முயன்ற சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆலம் பெயரும் அடிபட, அவர் சிறை செல்ல நேர்ந்தது. 1995-ல் இந்தக் கொலை வழக்கால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இதன்பின் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்துவந்த நிலையில், தலைமறைவில் இருந்தே 2000-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

இவரை சிலர் 'நக்ஸலைட்' என்றும் கூறுகிறார்கள். மக்களிடையே கிளர்ச்சியைத் தூண்டி, வன்முறையை ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ஆனால், ஏழை மக்களுக்கு சேரவேண்டிய 21 லட்சம் நிலத்தை பிரித்துக்கொடுக்க வேண்டிதான் பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்று வருவதாகக் கூறுகிறார் ஆலம்.

அவர் கூறுவதை போல, சீமாஞ்சல் பகுதிகளில் நிலம் இல்லாத ஏழைகள் பல ஆண்டுகளாக தங்களுக்கு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் ஆலம் தலைமையில்தான் நடைபெறும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் ஆலம்.

இந்த நிலையில் இந்தியாவில் இப்படி ஒரு மனிதர் இருப்பது நிச்சயமாகவே ஆச்சரியம்தான்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.