வாழைச்சேனையில் ஊரடங்கு நீடிப்பு!!

 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா மைய காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கு அமைய இந்த பகுதியில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தப் பகுதி மக்கள் பீதியடையாமல் எவ்வாறு இன்றுவரை இருந்தார்களோ அவ்வாறே தொடர்ந்தும் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளை இராணுவத்தினர் சுகாதாரப் பிரிவு, பொலிஸார், மாவட்ட செயலகம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா மையத்தை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்திருக்கின்றோம்.

மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அனைத்து தகவலும் உடனுக்குடன் இந்த மையத்திற்கு வந்தடையும்.

அந்த தகவல்களை உரிய பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உடனுக்குடன் வழங்கப்படுவதுடன், இந்த மையம் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும். இந்த மையத்துடன் தொடர்புகொள்ள 065 2226874 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.