கொழும்பு சென்று கொரொனா வாங்கி வந்த வைத்தியர்!


 திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் நோயாளர்காவு வண்டியை பயன்படுத்தி கொழும்பில் உள்ள தனது தாயாரின் பிறந்தநாளுக்கு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பைச் சேர்ந்த வைத்தியர் திருகோமணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றிவருகிறார்.

கொழும்பு உட்பட்ட மேல் மாகாணம் முழுமையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியர் நோயாளர் காவு வண்டியைப் பயன்படுத்தி கொழும்பில் உள்ள தன்னுடைய தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று திரும்பியிருக்கின்றார்.

அங்கிருந்து வந்த வைத்தியர், வைத்தியசாலை விடுதியில் கொரோனா அறிகுறிகளுடன் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை கொழும்பு மஹரகமவில் உள்ள தொற்றுநோயியல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட நிலையிலும் அவருடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் மற்றொரு வைத்தியர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளுக்கு சென்று நோயாளர்களை பார்வையிட்டுவந்திருக்கின்றார் .

அவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த வைத்தியருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அது சமூகத்திற்கு கடும் அச்சுறுத்தலாக மாறும் என்று துறை சார்ந்தவர்களால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சமூகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சூழலில் ஒரு சில வைத்தியர்கள் இவ்வாறு நடந்துகொள்வது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.