சொத்துக்காக பெற்ற தாயையே வெட்டிக்கொன்ற மகன்கள்!


 சொத்துக்காக பெற்ற தாயையே வெட்டிக்கொன்ற கொடுமையான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தமிழ் நாட்டின் மதுரை மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மதுரையின் திருமங்கலம் அருகே சொக்கநாதன் பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசிக்கும் முத்துக்கருப்பன் – பாப்பா தம்பதியினருக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உட்பட ஏழு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் இரண்டு மகன்கள் இறந்து விட்டனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் மூத்தமகள் அழகு மதுரை அழகப்பன் நகரில் வசித்து வருகிறார்.

மற்ற இரண்டு மகள்களும் திருமணமாகி விவாகரத்து பெற்றதால் சொக்கநாதன் பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.

இதில் மகன் பொன்ராம் திருமங்கலம் அருகே மேலக்கோட்டை பெரியார் காலனியிலும், கண்ணன் பொட்டல்பட்டியிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துகருப்பன் பெயரில் 2.50 ஏக்கர் நிலமும் பாப்பம்மாள் பெயரில் 30 சென்ட் நிலமும் உட்பட 2.80 ஏக்கர் நிலம் சொக்கநாதன் பட்டியில் உள்ளது.

சொக்கநாதன்பட்டி அருகே திருமங்கலம் – மதுரை சுற்றுச்சாலை செல்வதால் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இடத்தை பங்கிட்டு கொடுத்தால் தங்களது குடும்ப வறுமையை நிலத்தை விற்று சரி செய்து கொள்ளலாம் என நினைத்து முத்துக்கருப்பன் மகன்கள் பொன்ராம் மற்றும் கண்ணன் இருவரும் பெற்றோர் பெயரில் உள்ள நிலத்தை பங்கிட்டு தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த பாப்பா தனது மூன்று மகள்களுக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார். ஆனாலும் இதற்கு உடன்படாத கண்ணனும், பொன்ராமும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனையடுத்து சொத்து பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு திருமங்கலம் பொலிசார் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு முத்துக்கருப்பன் அவரது மனைவி பாப்பா மற்றும் பிள்ளைகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போதும் பாப்பா தனது கணவர் பெயரில் உள்ள சொத்து தனது தந்தை வழியாகவே வந்ததாகவும் எனவே பெண் பிள்ளைகள் மூன்று பேருக்கும் சொத்தில் சமபங்கு கொடுத்தால் மட்டுமே சொத்தைப் பிரித்துக் கொடுக்க சம்மதிப்பேன் எனவும் தொடர்ந்து கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து பாப்பம்மாள் இறப்புக்குப் பின்னர் சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என எழுதி வாங்கி கொண்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் மனதளவில் கண்ணன் பொன்ராம் இருவரும் சமாதானம் அடையவில்லை. இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை தாய் வீட்டிற்குச் சென்ற கண்ணன் அவரது மகன் சிவன், பொன்ராம் அவரது மகன் ரகு மற்றும் கணேஷ்குமார் ஆகிய 5 பேரும் வீட்டிற்குள் இருந்த தாய் பாப்பாவிடம் பத்திரப் பதிவு செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில் தாய் பாப்பாவுக்கும் மகன்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் முற்றியதால் தந்தை முத்துக் கருப்பன் தகராறை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பிடித்து வெளியே தள்ளி விட்டு ஆத்திரத்தில் மகன்கள் மற்றும் பேரன்கள் நால்வரும் பாப்பா வீட்டிலிருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கழுத்து, கை கால் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பாப்பா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட இரண்டு மகள்களும் அலறியடித்து வெளியில் ஓடி விட்டனர். அவர்கள் அலறி அடித்து ஓடி வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி தலைமையிலான பொலிஸ் குழு இறந்த பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஊருக்குள் பதுங்கியிருந்த கண்ணனை கைது செய்தனர்.

மேலும் கொலையாளிகள் பொன்ராம், சிவன், ரகு, கணேஷ்குமார் ஆகிய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து தப்பி ஓடிய 3 பேரையும் பொலிசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கண்ணனை திருமங்கலம் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.