தமிழ் அரசியல் கைதிகள் பெரும் அச்சுறுத்தலான நிலைமையில்!


 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றிக் காணப்படுவதுடன், தற்பொழுது காணப்படும் கொரோனா சூழ்நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் இன்று (13) நாட்டின் கொவிட் -19 நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றிக் காணப்படுவதுடன், தற்பொழுது காணப்படும் கொரோனா சூழ்நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் நீரிழிவு உள்ளிட்ட பல தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வயது முதிர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

சிறைச்சாலைகளில் உரிய மருத்துவ வசதிகள் இன்றியும், அவர்களை ஊக்குவிக்க எவரும் இன்றி மிருகங்கள் போன்று வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நோய் சூழ்நிலையால் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும்.

கொரோனா காரணமாக வைத்தியசாலைகளில் அனைவரையும் நுழைவதற்கோ, நோயாளிகளுடன் தங்கியிருப்பதற்கோ அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த வாரம் வடமாகாணத்தில் வைத்தியசாலையொன்றில் 11 வயது சிறுமி சிகிச்சைக்காகக் சென்றுள்ளார். இவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருடன் குடும்ப உறுப்பினர்கள் எவரும் நிற்பதற்கு வைத்தியர்கள் அனுமதிக்காமையால் குறித்த சிறுமி பேத்தியாருடன் மீண்டும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள எவரின் பிள்ளையை அல்லது பேரப்பிள்ளையை இவ்வாறு தனியாக வைத்தியசாலையில் தங்கவைப்பதற்கு அனுமதிப்பீர்களா, இந்த நிலைமைகளை சுகாதாரத்துறை பரிசீலனை செய்து மாற்று வழிகளைக் கையாள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ் மாவட்டத்தில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுகிறது. குறிப்பாக வடக்கில் பல வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சைக்கு எடுக்கப்பட்டிருப்பதால் வெளி மாவட்டங்களிலிருந்தே வைத்தியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் வடக்கில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.