தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள்!!


இலங்கையில் தீவிரமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸ் தற்போது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் பரவி சடுதியாக உயர்வடைந்துள்ளது .

இந்த நிலையில் கொரோனா ஆபத்து நிலையை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் சார்பாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடாக தமிழ் அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்கள் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கு இந்த மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில், கொரோனாவின் மரணப்பிடியிலிருந்து உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க யாவரும் ஒன்றிணைய வேண்டும். உலகளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் மிக மோசமாக காணப்படுகிறது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது இலங்கையில் மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. தொடர்ந்து சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோய்த்தொற்று தீவிரத்தால் தனிமைப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.

நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. நோய்த்தொற்று தீவிரத்தால் பாதிக்கப்பட்டவர்களை தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

நாளாந்தம் சராசரியாக 500 பேருக்கு மேல் தொற்றாளர்களாக இனம் காணப்படுகின்றனர். மருத்துவ ஆய்வுகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் மிக வேகமாகவும் மோசமாகவும் பரவி முழு நாட்டையும் அச்சுறுத்தி வருகின்றது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும் கூட மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகும் அபாயமும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் நோய்த் தொற்று மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது. எனினும் இந்த சிறைக்கைதிகளின் விடயத்தில் அரசாங்கமும் அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது முதல் நாள் 7கைதிகள் தொற்றுக்கு ஆளாகி இருந்தமை கண்டறியப்பட்டது. அடுத்த நாள் அது 22ஆக அதிகரித்து பின்னர் படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து கொண்டிருக்கின்றது.

தற்போது சிறைச்சாலைகளில் கொரோனாத் தாக்கம் மிக மோசமாக அதிகரித்து கொண்டிருக்கின்றது என்பது அப்பட்டமான உண்மை. கொரோனா தாக்கம் ஏற்பட்ட போது சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொழுது, அரைவாசியைக் கூட அங்கு நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை.

கைதிகளைப் பார்வையிடுதல், நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன இடைநிறுத்தப்பட்ட பின்பும் இந்த வைரஸ் தொற்று சிறைக்குள் நுழைந்தது என்றால் இதற்கு யார் பொறுப்பாளி என்பதை எவராலும் தேடிப் பார்க்க முடியவில்லை.

மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என தினமும் கைது செய்யப்படுவோர் சிறைத்துறையின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இலங்கையில் 12000 கைதிகளை மட்டுமே தடுக்கக்கூடிய சிறைச்சாலைகளில் 37000 த்துக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு எப்படி சமூக இடைவெளி இருக்கப்போகின்றது. இவர்களை பாதுகாப்புடன் எப்படி பராமரிக்க முடியும்?.

தற்போது முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் சுமார் 15-25 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீரிழிவு, மன உளைச்சல், சுவாசக்கோளாறு போன்ற பல தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தமிழ் அரசியல்கைதிகள் இன்னொருபுறம் மிக மோசமான உடல், உளப் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு போதிய மருத்துவமோ, போசாக்கான உணவோ கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர். இவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து காலதாமதப்பட்டு வருக்கின்றது. இதனாலும் இவர்கள் உடல், உள ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளில் 10 க்கும் மேற்பட்டோர் சிறைச்சாலைக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.