முக அழகைப் பாதிக்கும் கருவளையம்!!



 

உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை "மீன் விழியாள்" என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை "வேல் விழியாள்" என்றும் சொல்வார்கள்.


சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்ல வரவில்லை. அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை தான் சொல்ல வருகிறேன்.


கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகையேக் கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.


சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.


கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.


சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.


சரி... வந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று கேட்கிறீர்களா? இதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.


கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.


இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.


கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.


வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.


பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.


இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இனி... சரியா பண்ணுவீங்க தானே...?

 


நெல்லை விவேகநந்தா

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.