முன்னாள் அமைச்சருக்கு GMOA எச்சரிக்கை!


 சமைக்காமல் பச்சை மீனை உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்களின் தோலில் உள்ள பற்றீரியா மற்றும் நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பைக் கடுமையாகச் சேதப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீன் உட்கொள்ள வேண்டுமானால் மீன்களைக் கழுவி, சுத்தம் செய்து, சமைத்து உண்ணுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தினார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பச்சை மீனை உட்கொண்டு காண்பித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று பரவாது தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.