சிவன்_பார்வதிக்கு_எழுதிய_கடிதம்!

 


அன்பே பாரு......

அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் புறப்பட்டுவிட்டேன்.

விஸ்ணு படலையில் வந்து நின்று அழைத்தபோது....

என்னால் மறுக்கமுடியவில்லை.

அவனது கண்களில் திரண்டிருந்த கண்ணீர்

என் மனதை ஏதோ செய்தது.

நான் புறப்பட்ட தருணத்தில்

நீ சமையலறையில் காலை உணவைத் தயாரித்துக்கொண்டோ,

படுக்கை விரிப்புக்களை சரிசெய்துகொண்டோ

இருந்திருப்பாய்.

உன்னிடம் சொல்லாமல் பயணப்பட்டது

இதுதான் முதல்த்தடவை என்றில்லை

ஆயினும் 

இந்தமுறை ஏதோ மனதை உறுத்துகின்றது.

பூலோகத்திலிருந்து எவரையும் விண்ணுலகுக்கு 

அழைக்க வேண்டாம் என்று யமனுக்கு 

திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன்.

யார்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள்.

யமனைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்

அவனது பாசக்கயிற்றை

பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்

தொற்று எங்கிருந்து யாரிடமிருந்து தொடங்கியது என்று

கண்டுபிடிக்கவேண்டும்.

இதில் விசித்திரம் என்னவென்றால்

சித்திரகுப்பதனுக்கும் பிறதூதுவர்களுக்கும் தொற்றில்லை.

இந்திரன் தப்பித்திருப்பதும்

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

எக்காரணம் கொண்டும் நாரதரை 

வீட்டுக்குள் அனுமதிக்காதே.

அவன் பரதேசம் அலைபவன் 

கிருமிகளைக் காவிக்கொண்டு வரக்கூடும்.

படலையோடே கதைத்துவிட்டு அனுப்பிவிடு,

ஒரு மீற்றர் இடைவெளி முக்கியம்.

மூத்தவனின் முகத்துக்கு முகக்கவசம்

தைக்கக் கொடுத்திருக்கிறேன்.

முதலில் அவனது தந்தங்களை அறுத்தகற்றவேண்டும்.

அவனது பெருச்சாளி மூட்டு வலியால் 

அவதியுறுகிறது.

வாகனத்தை மாற்றச்சொன்னால் கேட்கிறானில்லை.

வள்ளி தெய்வானையின் வாய்

மிகவும் நீளத்தான் தொடங்கியிருக்கிறது.

நீ அவர்களின் குடும்பச் சண்டையில் தலையிடாதே,

எல்லாவற்றையும் முருகன் பார்த்துக்கொள்ளட்டும்.

தவிரவும்

இங்கு வந்தவுடன் முதல் வேலையாக

சித்தர்கள் தயாரித்த மூலிகை மருந்தை

சிலருக்குக் கொடுத்துப் பார்த்தோம். 

யாருமே தேறவில்லை.

ஓவ்வொரு சித்தர்களும் ஒவ்வொரு மருந்தை தயாரித்திருக்கிறார்கள்.

அவற்றுக்கு அவர்களின் விளக்கங்கள் வேறு கடுப்பேத்துகிறார்கள்.

சப்த ரிஸிகளை அழைத்துக் கலந்துரையாடியிருக்கின்றேன்.

அவர்கள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால்,

முதலில் மருந்தை யாரிடம் பரிசோதிப்பது என்பதுதான்.

தேவர்கள் அனுமதிக்கிறார்கள் இல்லை

எல்லா ஊடகங்களிலும் இதுதான் பேச்சு

எல்லோரும் என்னைத்தான் வசைபாடுகின்றார்கள்...

அழித்தல் தொழிலை நான் பொறுப்பேற்று விட்டு படுகிறபாடு நாய்படாப்பாடு.

பிரமன் சொல்கிறான்

முதலில் மருந்தை நரகலோகத்தில் பரிசோதிப்போம் என்று,

அவர்களே துன்பத்தில் உழல்கிறார்கள்

மேலும் துன்பத்தைக் கொடுப்பதா...?

சோமபானக் கடைகள் எல்லாவற்றையும்

மூடும்படிதான் உத்தரவிட்டிருக்கிறேன்.

ஆனாலும், பலரும் நிறைவெறியுடன்தான் திரிகிறார்கள்.

விண்ணகக் காவற்படை 

சட்டங்களை கடுமையாகத்தான் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

என்றாலும், ஏதோ தவறு நிகழத்தான் செய்கிறது.

முகக்கவசம் அணியாமல் தெருவுக்கு வராதே.

14 நாட்கள் தனிமைப்படுத்திவிடுவார்கள்.

பிறகு, விநாயகனுக்கு சமைத்துப்போட வேறு யாராலும் முடியாது.

நந்தியிடம் கைகழுவும் திரவத்தை வாங்கிக்கொடு.

யார் வந்தாலும் கைகளைக் கழுவிவிட்டே உள்ளே அனுமதிக்கும்படி சொல்லு.

அவனையும் அடிக்கடி கைகளைக் கழுவச்சொல். 

சோம்பல் பயல்,

இரை மீட்டுவதிலேயே கவனமாயிருப்பான்.

இன்னும் சமூகத்தொற்று இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

சுகாதார அமைச்சரைத்தான் எல்லாரும் 

வறுத்தெடுக்கிறார்கள்.

பாவம், அவர் என்ன செய்வார்

சாதுரியம் தெரியாமல் தடுமாறுகின்றார்.

மேலும் மேலும்

தனிமைப்படுத்தல் நிலையங்களை விஸ்தரித்திருக்கின்றோம்.

நேற்றும் காவல் படைக்காக புதிய தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றைத் திறந்துவைத்தோம்.

நேற்று புதிய செய்தியொன்றை 

வைத்தியர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்

“மேகங்களின் வழி நோய் பரவுவதாக.”

நாங்கள் என்ன செய்வது..

பூலோகத்திலிருந்து வரும் புகைகளை வேறு எங்கு கொட்டுவது...?

தேவதைகளுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறோம்..

மேகத்திட்டுக்களில் இளைப்பாற வேண்டாம் என்று.

றம்பை, ஊர்வசி போன்றவர்களின்

களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை விதித்திருக்கிறோம்.

தொலைக்காட்சி நாடகங்களை மட்டுந்தான்

அனுமதித்திருக்கிறோம்.

சனத்தை வேறு எப்படி திசைதிருப்ப முடியும்.

அடிக்கடி செய்திகளைப் பார்,

தொடர்நாடகங்களில் மூழ்கிக்கிடக்காதே.

படலையில் வேப்பிலையைக் கட்டித்தொங்கவிடு.

நான் வீடு வந்து சேர

நாட்கள் எடுக்கக் கூடும்.

எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.

என்ன செய்வது?

“பிறந்த பலனை அனுபவிக்கின்றோம்.”

விஸ்ணு பெரிதாக முகங்கொடுத்துக் கதைப்பதில்லை...

ஏதோ நான்தான்

நோயைப் பரப்பி என் தொழிலை 

நிறைவேற்றுவதாக நினைக்கக் கூடும்.

தன் தொழிலைச் 

சரியாகச் செய்ய முடியவில்லை என்ற 

மனக்கவலை அவ்வாறு நினைக்கச் செய்யலாம்.

முடிந்தவரை அவன் துயர் துடைத்தே மீளுவேன்.

நீ பத்திரம், மூத்தவனுக்கும்

இளையவனின் குடும்பத்துக்கும் 

என் அன்பைச் சொல்லு.

மீதி அடுத்த கடிதத்தில்...........

என்றும் உன் ஆருயிர்க் கணவன்,


சிவன்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.