வித்தியாசமாக எதிர்ப்பை வெளிப்படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) பொரளை மயான நுழைவாயிலில் வெள்ளைத் துணிகளைக்கட்டி, தனது எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரான அலி ஷாஹிர் மௌலானா தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளேன்.
பிறந்து வெறும் 20 நாட்களேயான பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரின் உடல்கள் இங்குதான் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன.
ஆகவேதான், நான் எனது முழு எதிர்ப்பையும் இந்த பொரளை மயானக் கதவில் வெள்ளைத் துணியைக் கட்டி வெளியிட்டுள்ளேன்.
எத்தனை முறை கோரிக்கைகள் முன்வைத்தாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக இந்த மயான கதவினில் இந்த வெள்ளைத்துணிகள் தொங்கட்டும்” எனப் பதிவேற்றியுள்ளார்.
இதேவேளை, ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் கடந்த வியாழக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற செய்தி கரிசனை அளிக்கின்றது என பிரிட்டனின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த கொள்கை இலங்கையின் முஸ்லீம்களின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்திற்கு முரணானது என்பதுடன் இந்த விவகாரம் தொடர்பில் காணப்படும் விஞ்ஞான ரீதியான முடிவுகளிற்கும் முரணானது எனவும் பிரித்தானியாவின் முஸ்லீம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயத்தில் வெவ்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே இராஜாங்க அமைச்சரான அலி ஷாஹிர் மௌலானா, தனது எதிர்ப்பை பொரளை மயான நுழைவாயிலில் வெள்ளைத் துணிகளைக்கட்டி வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை