பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள கோரிக்கை!!


 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இரண்டாவது முறையாகவும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே அடுத்த வருடத்திலாவது மகிழ்ச்சியாக நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்தார்.

அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள நத்தார் பண்டிகை தொடர்பில் அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன் போதே பேராயர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

நத்தார் பண்டிகையின் போது ஏனைய மக்களைப் போன்று நாமும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக மேல் மாகாணத்தில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதால் , மக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றை விடுக்கின்றேன்.

கொழும்பிலிருந்து வெளியேறுவதையும் ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு வருவதையும் இயன்ற வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும்.

நத்தார் பண்டிகையின் போது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் வழக்கம் உள்ளது. இம்முறை அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அனைவரும் இதனைப் பின்பற்றினால் கொவிட் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.

போக்குவரத்தை மாத்திரமன்றி பொருட் கொள்வனவிற்காக பல இடங்களுக்கும் செல்லுதல், மக்கள் ஒன்றிணைதல் என்பவற்றையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அரச மற்றும் தனியார் துறைகளில் வழமையாக நத்தார் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் ஆடம்பரங்களை தவிர்த்து அதற்கு செலவிடும் தொகையை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செலவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

வீடுகளில் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதில் தவறில்லை. எனினும் அதனை குடும்பத்தாருடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கோருகின்றோம்.

உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நத்தார் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து , இந்த தவறு மீண்டும் நாட்டில் இடம்பெறாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் அடுத்த வருடத்திலாவது நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தனிமைப்படுத்தப்படாத பிரதேசங்களில் ஒரு தடவையில் 50 பேரை மாத்திரம் உள்ளிடக்கிய வகையில் ஆராதனைகளை முன்னெடுப்பதற்கு அருட் தந்தையர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் திகதி நள்ளிரவு நடைபெறும் ஆராதனையை மாலை 6 மணியிலிருந்து குறைந்தளவிலான மக்கள் தொகையுடன் தொகுதி தொகுதியாக முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை நத்தார் தினத்தன்று வத்திக்கான் இலங்கை பிரதிநிதியான பேராயரதும் என்னுடையதும் பங்குபற்றலுடன் தமிழ் , ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆராதனை இடம்பெறும் என்பதோடு, அது ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.