பொலிஸாரின் செயற்பாட்டுக்கு சிவாஜிலிங்கம் கண்டனம்!
எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என, பாதுகாப்பு தரப்பினரான பொலிஸார் வடக்கில் அத்துமீறி செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய நேற்றையதினம் (வியாழக்கிழமை) வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவரை வீதியில் சுட்டு போடுவோம் என ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மிரட்டியுள்ளார்
குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், பொலிஸார், தமக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என்ற மமதையில் இவ்வாறு மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்
தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி, உடுப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பாண் வாங்குவதற்காக கடைக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், வழிமறித்து நாம் மோட்டார் சைக்கிளிலை மறித்தபோது நிறுத்தாமல் ஏன் ஓடினாய் என தகாத வார்த்தைகளால் பேசி, அவரது மோட்டார் சைக்கிளையும் உதைத்துள்ளார்.
அதன்போது அவர், தான் சந்திக்கு வரவில்லை எனவும், தான் பக்கத்து கடையில் பாண் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.
பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர், தனது துப்பாக்கியை அவருக்கு நீட்டி ‘நான் நினைத்தால் சுட்டுப்படுகொலை செய்வேன் உன்னை ‘ என மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து துப்பாக்கி முனையில் அவரை சந்திக்கு அழைத்து சென்றபோது, சந்தியில் நின்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் இவரை மறிக்கவில்லை. தப்பி சென்றவர் இவர் இல்லை என கூறியுள்ளார்.
அதன்போது துப்பாக்கி முனையில் அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர், மோட்டார் சைக்கிள் எடுத்துக்கொண்டு ஓடு, என மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி துரத்தி உள்ளார்.
பொதுமகன் ஒருவருடன், பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதுடன், துப்பாக்கி காட்டி ‘சுட்டுப்படுகொலை செய்வேன் ‘ என மிரட்டியமையினால் கூடியிருந்த மக்கள் அச்சமடைந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும், பொதுமக்களுடன் அவர்கள் அவ்வாறு அநாகரிகமாக பல தடவைகள் நடந்து கொண்டுள்ளார்கள் எனவும், அண்மையில் துன்னாலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து உடைத்து சேதபடுத்தினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இவர்கள் மாலை வேளைகளில் கைகளில் விக்கெட் உடன் வீதிகளில் நடமாடி திரிந்து மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொள்பவர்கள் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்களே இவ்வாறு பொதுமக்களுடன் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை