தம்பி கேட்ட வரம் - குட்டிக்கதை!


முன்னொரு காலத்தில் ரைப்யரிஷி என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு பராவசு, அர்வாவசு என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் ஒரே குருவிடம் முறையாகக் கல்வி பயின்று தேர்ந்தவர்கள். ஆயினும் குணத்தில் மட்டும் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அண்ணனான பராவசு சுயநலம் கொண்டவனாகவும், தம்பி அர்வாவசு விட்டுக்கொடுத்துப் போகும் நல்மனம் உள்ளவனாகவும் இருந்தனர். அண்ணனைத் திருத்தும் பொருட்டு தம்பி எவ்வளவோ எடுத்துக்கூறியும் பராவசு கேட்கவில்லை.


ஒரு சமயம் பிருஹத்யும்னன் என்ற மன்னன் யாகம் ஒன்றை நடத்த விரும்பி வேதம் பயின்றவர்களை அழைத்தான். அவனது யாகத்தை நடத்திக் கொடுப்பதற்காக பராவசு, அர்வாவசு இருவரும் சென்றனர். யாகம் நடைபெற்ற சமயம் திடீரென்று பராவசுவிற்கு தன் அழகிய இளம் மனைவியின் ஞாபகம் வந்தது. அவன் யாருக்கும் தெரியாமல் யாகத்தில் இருந்து விலகி வீட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் இருந்த புதருக்குள் இருந்து ஒரு சப்தம் கேட்டது. ‘ஏதோ ஒரு மிருகம் தான் வருகிறது’ என்றெண்ணி பயந்த பராவசு, அருகில் கிடந்த பெரியக் கல்லை எடுத்து சப்தம் வந்த திசையை நோக்கி வீசினான்.

புதருக்குள் இருந்து, ‘மகனே’ எனும் அலறல் சப்தம் கேட்டு, அங்கே சென்றவன் கண்ட காட்சியில் மனம் பதைத்தான். அவனின் ஆருயிர் தந்தை அவன் வீசிய கல்லால் அடிப்பட்டு இறந்து கிடந்தார். கண்ணீர் மல்க அவரை அங்கேயேப் புதைத்து விட்டு, வீட்டிற்குச் செல்லாமல் யாக சாலையை நோக்கித் திரும்பினான்.

அங்கே தன்னைக் காணாமல் தேடிய தம்பியிடம் நடந்ததைக் கூறி வருந்தினான். மேலும், தன் தந்தையைக் கொன்ற தோஷத்தில் இருந்து தன்னைப் பரிகார பூஜைகள் செய்து விடுவிக்குமாறும் வேண்டினான். அண்ணனின் நிலை கண்டு வருந்திய அர்வாவசுவும் பரிகார பூஜை செய்யும் பொருட்டு யாகத்தை விட்டு வெளியேறினான்.

பராவசு நடந்ததை மறைத்து விட்டு யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான். யாகம் பல மாதங்களாக தொடர்ந்து நடந்தது. இதனிடையே அண்ணனுக்காகப் பரிகாரத்தை முடித்த அர்வாவசு மீண்டும் யாகசாலைக்குத் திரும்பி வந்தான். தன் சுயநலம் இல்லாப் பூஜையின் பலனால் முன்பை விட அதிகப் பொலிவு பெற்றவனாக இருந்தான். அவனது பொலிவு கண்டு பொறாமைப்பட்ட பராவசு, அவன் யாகத்தில் இருந்தால் தன் முக்கியத்துவம் காணாமல் போகும் என்று கருதி அவனை முழுமையாக யாகத்தில் இருந்து விலக்கத் திட்டமிட்டான்.

தம்பி யாக சாலைக்குள் நுழையும் வேளையில் அவனைத் தடுத்து நிறுத்திய பராவசு, ‘ஒரு உயிரைக் கொன்று பிரம்மஹத்தி தோஷம் பிடித்த இவன் யாகசாலைக்குள் நுழையத் தகுதியற்றவன்’ என உரக்கச் சொன்னான். அதைக் கேட்டு மன்னன் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர். மன்னன் விவரம் கேட்க ‘எங்களைப் பெற்ற தந்தையைக் கொன்ற பாவி இவன்’ என்று வாய் கூசாமல் பொய்யும் சொன்னான், பராவசு.

அவன் கூறிய குற்றச்சாட்டை சற்றும் ஆராயாத மன்னனும், கோபம் கொண்டு அர்வாவசுவை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான். அண்ணனின் துரோகம் அறிந்தாலும், அர்வாவசு அதைச் சகித்து புன்னகை மாறாத முகத்துடன் நாட்டை விட்டுப் புறப்பட்டான். காட்டிற்குச் சென்று படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்து தவ வாழ்வை மேற்கொண்டான். தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அர்வாவசுவுக்கு காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார்.

அவரிடம் அர்வாவசு ‘என் தந்தை மீண்டும் உயிர் பெற வேண்டும். அண்ணனின் தீய குணங்கள் மறைந்து, அவன் நல்லவனாக வாழ வேண்டும்’ என்று கேட்டான்.

தனக்காக எதையும் வேண்டாமல் தன் அண்ணன் திருந்த வேண்டும் என வரம் கேட்ட அர்வாவசுவின் உயரிய எண்ணம் கண்டு வியந்த பிரம்மா, அவன் கேட்ட வரங்களைத் தந்து அருளினார். தன் சுயநல குணம் மறைந்து நல்லவனான அண்ணன் பராவசு தன் தவறை உணர்ந்து தம்பியிடம் மன்னிப்பு வேண்டினான். பின் இருவரும் இணைந்து பிரம்மா உயிர்ப்பித்த தங்கள் தந்தையுடன் நீண்ட காலம் வாழ்ந்து இறைப்பணியில் ஈடுபட்டு நற்செயல்கள் செய்து புகழ்பெற்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.