ஒருபோதும் அப்படி கூறவில்லை கோட்டாபய!
சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வார இறுதி சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இது சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்” என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, உடனடியாக பஷில் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
“இல்லை. யாரும் அவ்வாறு கூறவில்லை. ஜனாதிபதி அவ்வாறு கூறியதாக சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களும், வெளிநாடுகளில் உள்ளவர்களும் கூறுகின்றனர். பொறுப்புள்ள எவரும் அவ்வாறான கருத்தொன்றை முன்வைத்தார் என நான் நினைக்கவில்லை” என பதிலளித்தார்.
“நான் சிங்கள பௌத்த வாக்குகளினாலேயே ஜனாதிபதியானேன்” என அநுராதபுரத்தில் பதவியேற்கும் போது, ஜனாதிபதி கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தாம் அவ்வாறு கூறுவது உண்மை என தெரிவித்த பஷில் ராஜபக்ஷ, இந்த கட்சி அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களும் சொந்தமான கட்சி எனவும் கூறினார்.
“எனினும், இந்த கட்சியிலுள்ள பெரும்பாலானோர் பௌத்தர்கள். எமக்கு வாக்களித்த பெரும்பாலானோர் பௌத்தர்கள். அதில் மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. தேர்தல் முடிவுகளின் ஊடாக அது வெளிப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை