கோட்டாபய கொடுத்த அறிவுறுத்தல்!

 



உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, தென்னிந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் பேசப்பட்டது.

தென்னிந்தியாவில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள் வசிக்கின்ற நிலையில் அவர்களில் 80,000 பேர் வரையில் இந்தியாவில் பதிவுசெய்து கொண்டுள்ளனர்.

இன்னும் 20 சதவீதமானவர்கள் அங்கு பதிவு செய்யப்படாமல் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் அவர்கள் நாடு திரும்புவதற்கு இவ்வளவு காலம் இந்தியாவில் தங்கியிருந்தமைக்கான விசா கட்டணத்தை இந்திய அரசாங்கம் கோருவதாகவும் அதனால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன,

அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் அறிவுறுத்தி இருந்ததாகவும் எனினும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தநடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் உரிய தருணத்தில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர், தமிழகத்திலிருந்து நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கை அகதிகளை, இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்

அதேநேரம் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைக்கு எவ்விதமான தடையும் இல்லையெனவும் வலியுறுத்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.