ஆப்பிள் நிறத்தில் முத்தங்கள் - கவிதை!!

 


அவள் அழகியுமில்லை

என் ஆன்மாவை அவளிடம்

விற்று விடுவதற்கு முயற்சிக்கிறேன்

அவ்வளவுதான்

ஆடைகள் கதவுக்கு உள்ளே 

மூச்சிரைத்துக்கொண்டிருக்கின்றன

ஒரு ரயில் என்ஜினைப்போல

ஒரு குண்டுபல்புவின் டங்க்ஸ்டன் இழையின் எரிநிறத்தை விட

அவளின் இதழ் வெப்பமானது

 நட்சத்திரங்கள் என்பது புரளிதான்

 உன் கண்களை நோக்கி விட்டேன்

சூதாட்டத்தில் கலந்துக்கொள்வதற்கான கட்டணத்தை விட 

மிகவும் அதிகமானது உன் மௌனம்

இதைப்பற்றி 

என்ன யோசிக்கிறாய்...?

வெதுவெதுப்பான பாலில் நீராடுகிறாய்

உலோகங்கள் திராட்சைகளாகின்றன

ஆப்பிள்கள் நிறத்தில் முத்தங்கள் 

தருகிறாய்

உன் முத்தங்களுக்கென ஆடம்பரங்கள் வாய்த்திருக்கிறது

ஒரு ஆட்டுக்குட்டிக்கும் நாய்க்குட்டிக்கும் 

இரண்டாகப் பிளந்த ஆரஞ்சு சுளைகளின்  விரல்களை  

பியானாவில் நீ பதித்த கணத்தில்

ஒரு கதவையுடைத்து சாத்வீகனும்

மறுகதவையுடைத்து தாமச சாத்தானுமாய்

உள்ளே வருகின்றேன் ...

ஒரு கணம் பொறு ...

நான் உனக்கொரு பரிசு

தருவதற்காக வைத்திருக்கிறேன் 

நீ அடக்கத்துடன் புன்னகைத்த 

மழை கையொப்பமிட்ட 

புகைப்படமொன்றில்

எனக்கேயுரித்த பொக்கிஷங்களாய்

வைரங்கள் பதிப்பதற்கு பதிலாக

ஒரு கவிதையை பதித்துவைத்திருக்கிறேன் ...

என்னால் நூலகத்தை 

எரிக்கவே முடியாது 

உனக்காக நான் எழுதிய கடிதங்கள்

ஆன்மாவில் மிக ஆழமாக பதிந்திருப்பவை ஒன்றுதான்

என்னுயிரில் யாரோயொருவளின்

புது ரத்தத்தை பாய்ச்சுதலை விட

நான் மரிப்பதே மேல்.....



ராம் பெரியசாமி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.