என் இறைவன் வீதியிலே கிடக்கிறான்..!!


நேற்றெனக்குப் பொங்கலுக்கு அரிசி இட்டவன் புழுதி மண்ணில் கிடக்கிறான்..

நாளையெம் எல்லோர்க்கும் உணவு வேண்டித் தன் உழவுரிமையைக் கேட்கிறான்.

எனது வயிற்றிற்காய்ப் போராடும்
அவன் வீட்டு உலைக்கு அரிசியில்லையாயினும்,
விதைக்க நாலு நெல்மணிகளைப் பசியோடிருந்து காக்கிறான்...

கருகிக்கிடக்கும் பயிர்கண்டு
கண்ணீர்மல்க நிற்கிறான்
தரிசாய்ப்போகும் நிலம்கண்டு
தண்ணீர்கேட்டுத் தவிக்கிறான்...

பொன்னும்,பொருளும், புகழும்,
பதவியும் தேடிக் கடையோர் கிடக்க
உண்ண உணவுக்காய் எல்லோர்க்கும் வழிதேடி என் இறைவன் வீதியிலே கிடக்கிறான்...

கண்ணை இமை காப்பதுபோல் பூமிப்பெண்ணைப் பேணுமிவன் தன்
புண்ணியச் செய்கையினால் என்
தாய்மண்ணைப் பூரிக்கச்செய்கிறான்...

முன்னைத் தவமிருந்த முழுவினையாய்ப்
பேணவேண்டும் நாம், என்னை உன்னைமட்டுமல்ல, மண்ணையும்
மண்காக்கும் மைந்தரையும்தான்...
இல்லையேல் பொய்த்துப்போவது
மழைமட்டுமல்ல நம் பூடகவாழ்வும்தான்..
                                       
*-காந்தள்-*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.