மணிவண்ணனுக்கு ஆதரவு முன்னணிக்கு எதிர்ப்பு ஈபிடிபி அறிவிப்பு!


 வி.மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரல்ல. அவர் அந்த கட்சியிலிருந்து வெளியேறிய சுயேட்சை வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே நாம் அவரை ஆதரித்தோம். நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒருபோதும் ஆதரிக்கவில்லையென தெரிவித்துள்ளார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி ரெமீடியஸ்.

ஈ.பி.டி.பியின் எதிர்பார்ப்புக்கள் என்னவென்பதை மணிவண்ணன் குழு நன்றாக அறியும். அதனால், எம்மையும் திருப்திப்படுத்தும் விதமான வரவு செலவு திட்டத்தையே அவர்கள் சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி மு.ரெமீடியஸ் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வரவு செலவு திட்டத்தை தோற்கடித்தது என்பது தனியே வரவு செலவு திட்டத்தின் உள்ளடக்கம் சார்ந்ததல்ல. அதை சமர்ப்பிக்கும் முதல்வரின் நம்பிக்கையற்ற தன்மை. யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட்டை தவிர்ந்த வேறு ஒருவரை பிரேரித்திருந்தால் ஆலோசிக்க தயார் என நாம் கோரியிருந்தோம். ஆர்னோல்ட் 4 முறை வரவு செலவு திட்டம் சமர்ப்பித்து தோல்வியடைந்திருந்தார். எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு விடாப்பிடியாக அவரையே வேட்பாளராக நியமித்தது.

ஆர்னோல்ட்டை நாம் ஆதரித்திருந்தால் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு சபை கலைந்திருக்கும். கடந்த இரண்டரை வருடங்களின் மேலாக முதல்வரின் தலைமையில் மாநகர நிர்வாகம் முறையாக இயங்கவில்லை. மாநகரசபையின் முக்கிய பணிகளான கழிவகற்றல், வடிகால்கள் சுத்தம் செய்வது போன்ற அடிப்படையான விடயங்கள் சிறிதளவேனும் ஒழுங்காக இடம்பெறவில்லை.

முன்னாள் முதல்வரின் நடவடிக்கையினால் மக்கள் மிக அதிருப்தியாக இருந்தார்கள். குறிப்பாக நகர வியாபாரிகள் முதல்வரை தோற்கடிக்கும்படி வலியுறுத்தினர். மக்களின் நலனின் அடிப்படையில் முதல்வரை தோற்கடித்தோம்.

இதனடிப்படையில் முதல்வர் பதவிக்காக போட்டியிட்ட வி.மணிவண்ணனை ஆதரித்தோம். சபை கலைய கூடாது, பழைய முதல்வர் முதல்வராக மீண்டும் வரக்கூடாது என்ற இரண்டு அடிப்படையில் வாக்களித்தோம்.

வி.மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரல்ல. அவர் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே நாம் அவரை ஆதரித்தோம். நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

வரவு செலவு திட்டத்தில் எமக்கு திருப்தியில்லாத நிலைமை மணிவண்ணன் உருவாக்க மாட்டார். கடந்த 5 முறை வரவு செலவு திட்டம் தோற்கடித்த போது எம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்களை மணிவண்ணனும், அவரது ஏனைய 9 உறுப்பினர்களும் அறிவார்கள். அதற்கேற்ற வகையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பார்கள். தனது சுயநலனின் அடிப்படையில் மணிவண்ணன் வரவு செலவு திட்டத்த்தை தயாரிக்கமாட்டார் என்ற முழுமையான நம்பிக்கையுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.