பாய்க்கு அடியில் தங்கி இருந்த விஷப் பாம்பு!


 வீட்டினுள் படுத்திருந்த நபரின் பாய்க்கு அடியில் விஷப் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரது பாய்க்கு அடியிலேயே குறித்த விஷப் பாம்பு சுருண்டு படுத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் குறித்த உத்தியோகத்தர் நேற்று அலுவலகத்திற்குச் சென்றுவந்த களைப்பு மிகுதியால் சற்று முன்னராகவே பாய் விரித்துத் தூங்கியுள்ளார். இன்றைய தினம் அதிகாலை குறித்த உத்தியோகத்தர் எழுந்து பாயை சுற்றியபோது பாய்க்கு அடியில் கொடிய விஷமுடைய பாம்பு சுருண்டு படுத்திருந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டுக் கதவினை இரவு மூடிவிட்டே தூங்கச் சென்றதாகக் குறிப்பிடும் அவர் பாம்பு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை என்கிறார்.

வன்னிப் பிராந்தியத்தில் அதிகம் காணப்படும் கண்டங்கருவளலை எனும் கொடிய விஷப் பாம்பே இவ்வாறு பாய்க்கு அடியில் இருந்ததாக அவர் பரபரப்போடு கூறியுள்ளார்.

குறித்த பாம்புக் கடியினால் கடந்த காலங்களில் வன்னியில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடித்த உடனே நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் இதன் விஷம் மனிதர்களுக்கு நித்திரை வருவதைப்போன்ற உணர்வைக் கொடுத்து சிறிது சிறிதாக உயிரைப் பறித்துவிடும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.