அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு விச ஊசி ஏற்றப்பட்டு மரணதண்டனை!


 அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்ணிற்கு விச ஊசி ஏற்றப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் லிசா மாண்ட்கோமெரி. இவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாபி ஜோ என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு பாபி ஜோவின் வீட்டிற்கு சென்றுள்ளார் லிசா. அப்போது கர்ப்பிணியாக இருந்த பாபி ஜோவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரது வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துக் கொண்டு லிசா தப்பிச்சென்றார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் லிசாவை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.

2007 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டபின், அவருக்கு மிசோரி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் லிசா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சிறு வயதில் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதால் லிசாவின் மனநிலை பாதிக்கப்பட்டதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இந்த காரணத்தை காட்டிய அவரது வழக்கறிஞர்கள் லிசாவின் மரணதண்டனைக்கு எதிராக தடை வாங்கினார் . இருப்பினும் லிசா தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில், அந்த தடையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம், லிசாவின் மரணதண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று , லிசா மாண்ட்கோமெரிக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியானா சிறையில் மரண ஊசி போடப்பட்டது. பின் அமெரிக்க நேரம் காலை 1 :30 மணி அளவில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனை பற்றி கருத்து தெரிவித்த லிசா மாண்ட்கோமெரியின் வழக்கறிஞர் லிசாவின் மரணதண்டனையில் பங்கேற்ற அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மனநல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்த தண்டனை உகந்ததல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், 1953ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது தான் ஒரு பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.