மாஸ்டர்’ வசூல் நிலவரம்!


 விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் குறைந்து கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டன. அப்போதிலிருந்தே 50% இருக்கைக்குத்தான் அனுமதி வழங்கியது தமிழக அரசு. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகி வந்தன. அவை அனைத்துமே மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. இதனால் பெரிய படங்கள் வெளியீட்டுக்காகத் திரையரங்க உரிமையாளர்கள் காத்திருந்தனர்.

இறுதியாக விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தமிழக அரசும் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கி, பின்பு மத்திய அரசின் அறிவுறுத்தலால் அந்த அனுமதியை ரத்து செய்தது.

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், தமிழகத்தில் சுமார் 90% திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ வெளியானது. நீண்ட நாட்கள் கழித்து பெரிய நடிகரின் படம் என்பதால், ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் படையெடுத்தார்கள். அனைத்துத் திரையரங்குகளுமே நிரம்பி வழிந்தன. சில திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு டிக்கெட் கொடுத்த காட்சியும் அரங்கேறியது.

தமிழகத்தில் முதல் நாளில் ‘மாஸ்டர்’ திரைப்படம் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 2-ம் நாள் வசூல் சேர்த்து 40 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாகப் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். இந்த வார இறுதி நாட்களைக் கணக்கில் கொண்டால், 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

‘மாஸ்டர்’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வைத்துள்ள லலித் குமாரே, தமிழகத்தில் நேரடியாக வெளியிட்டுள்ளார். இதனால், தற்போதுள்ள வசூல் நிலவரப்படி சுமார் 75% வசூல் அவருக்கு நேரடியாகச் சென்றுவிடும். ஆகையால், இன்னும் ஒரு வாரத்தில் லாபத்தை எட்டிவிடுவார் என்று கூறுகிறார்கள்.

அதேபோல் தெலுங்கில் முதல் நாளில் 5.74 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ‘மாஸ்டர்’. இது விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலாகும். இந்த வரவேற்பு தொடர்பாக ‘மாஸ்டர்’ தெலுங்கு உரிமையை வாங்கி வெளியிட்ட மகேஷ், “தெலுங்கில் கிடைத்த வரவேற்பால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய். 3 பெரிய தெலுங்குப் படங்களுக்கு இடையே வெளியிட்டோம். ஆனால், ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். எங்களுடைய 80% விநியோகஸ்தர்கள் இப்போதே லாபத்தில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், இதர நாடுகளில் ‘மாஸ்டர்’ வெளியானது. ஆஸ்திரேலியாவில் வெளியான தென்னிந்தியப் படங்களில் இதுவரை பண்ணாத வசூலை முதல் நாள் செய்திருப்பதாக விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சுமார் 90% திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு தமிழ்ப் படமும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் விநியோகஸ்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.