வாகன மோசடி: 17 வாகனங்கள் மீட்பு!


 வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியாகம் செய்துவரும் நிறுவனங்களில் போலி ஆவணங்களை காண்பித்து வாகனங்களை பெற்றுக் கொண்டு , அவற்றின் இலக்கத்தகடு மற்றும் என்ஜீன் இலக்கத்தை மாற்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்ததாகவும் , அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாகவும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியோகம் செய்துவரும் நிறுவனங்களில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை பெற்றுக் கொண்டு, அவற்றின் இலக்கத்தகடு மற்றும் இன்ஜீன் இலங்கங்களை மாற்றி அமைத்து , அதனை விற்பனை செய்வதற்கு அவசியமான போலி ஆவணங்களையும் தயாரித்து மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் முல்லேரியா பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

முல்லேரியா பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைககளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் போலி தேசிய அடையாள அட்டை , சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மின் கட்டண பற்றுச்சீட்டு என்பவற்றை காண்பித்தே இவ்வாறு வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களால் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்களை உதிரிபாகங்களாகவோ அல்லது அவற்றின் இலக்கத்தகடு மற்றும் இன்ஜீன் இலக்கங்களை மாற்றியோ விற்பனை செய்துள்ளனர். சந்தேக நபர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வாகனங்களுக்கான கட்டணங்கள் கிடைக்கப்பெறாததால் உரிய நிறுவனத்தினர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட விலாசாங்களுக்கு சென்று விசாரணை செய்து பார்த்தன் பின்னரே அவர்களது மோசடி தொடர்பில் தெரியவந்துள்ளது.

யக்கல மற்றும் மீறிகம ஆகிய பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 16 கார்களும் , வேன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தமை தொடர்பில் கம்பஹா – மகலெகொட பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபர்கள் சீதுவை , கம்பஹா , கொச்சிக்கடை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கே வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியோகம் செய்துவரும் நிறுவனமொன்றிற்கு வாகனங்களை கொடுத்து அது காணாமல் போயுள்ள வாகன உரிமையாளர்கள் , முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தங்களது வாகனம் அங்கு இருக்கின்றதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இதேவேளை இது போன்ற நிறுவனங்கள் தங்களிடம் வாகனங்களை பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் மேலும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களிடம் பெற்றுக் கொள்ளும் ஆவணங்களுடன் , அவர்களின் புகைப்படங்களையும் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும். இவ்வாறான நிலைமைகளின் போது உரிய நபர்களை அடையாளம் காணுவதற்கு இலகுவாக இருக்கும். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.