வாழ்ந்த வாழ்வியலை நியங்களை தேடும் நிகழ்காலப் போலி!!


 வாழ்ந்த வாழ்வியலை

எந்த வர்ணங்களாலும்
ஈடுசெய்ய முடிவதில்லை இப்போது
எங்கோ தொலைதூரத்தில்
தொலைந்து போன
ஆதவனின் ஒளிவீச்சு
ஒருமுறையேனும் வாசல் தேடாதா
என்ற ஏக்கத்துடனேயே
கழிந்து போகிறது
வாழ்வின் மீதி
நினைவு கீறல்கள்
மின்னல் போல் அடித்து
மயிர்கள் புடைத்து நிற்கும்
போதெல்லாம்
உணர்ச்சிகள் மரித்து
ஊமையாகிறேன்
மிதிவண்டி பரல் சுற்றி
குரல் கேட்ட நினைவுகளும்
துலாவில் நீரெடுத்து
துள்ளிக்குதித்த பொழுதுகளும்
அவர்கள் உடை ரசித்து
பொருள் தடவிய பொற்காலமும்
வீழ்ந்தபோதும் விதையாக
கோயில் நிறைத்த வரிசைகளும்
இராத்திரி களை இன்னும்
நீளமாக்குகின்றன
புழுதி வீதி வீசிய வசந்தத்தை
கறுப்பு தார்களில் கண்டதில்லை
அரிக்கன் லாம்பின் வெளிச்சத்தை
வடக்கின் வசந்தம் தந்ததில்லை
நீலங்களின் நேர்த்தியின் நிர்வாகத்தை
காவிகளால் முயன்றாலும் முடிவதில்லை
பழந்சோற்றுக்கரைசல் தேன் சுவையும்
பீட்சா பர்கரில் தெரிவதில்லை
அவர்களோடு வாழ்ந்த ஜுவிதத்தை
இனி எந்த வாழ்வும் தரப்போவதில்லை
இறைவா எனக்கொரு
வரங்கொடு நீ
வேண்டாம் இனியும்
இழி வாழ்வு
வாழ்ந்தால் வேண்டும்
அவ் வாழ்வு இல்லை
மடிந்தே போகும் என் வாழ்வு

திலகநாதன் கிந்துஜன்

23,01,2021

முல்லைத்தீவு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.