பருத்தித்துறையில் 23 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!


 பருத்தித்துறை புலோலியில் நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 23 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற சமயம் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை சரிவரத் தெரியவில்லை.

தொற்றாளர் பலருடன் தொடர்பைப் பேணியிருக்கும் நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

நெல்லியடியில் உள்ள டயலொக் நிறுவன அலுவலகத்துக்குத் தொற்றாளர் சென்று, அங்கு அரை மணி நேரம் செலவிட்டுள்ளார். அதையடுத்து அந்த அலுவலகம் முடக்கப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தச் சமயம் அருகில் உள்ள கடை வர்த்தகர் ஒருவரும் அந்த அலுவலகத்துக்குச் சென்றதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவரது கடையும் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு தொற்றாளர் சென்றிருப்பதால், அந்த உணவகமும் மூடப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லியடியில் உள்ள வங்கிகளின் தன்னியக பணப்பரிமாற்ற இயந்திரங்களுக்கும் தொற்றாளர் சென்றிருப்பதால், அங்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.