போராளிகளுக்காக மக்கள்...!!


அமெரிக்காவின் புதிய அரசதலைவராக பொறுப்பெடுத்துக்கொண்ட பைடனின் பதவி ஏற்பு விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க உள்துறை அமைச்சும், சனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் செய்திருந்தார்கள். இதற்காக சுமார் 25000 இற்கு மேலான பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

அவ்வாறான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அமெரிக்கப்படைகளில் ஒரு தொகுதியினருக்கு தங்குமிட வசதிகள் செய்யப்படவில்லை என்பதால் அவர்கள் தமக்கு அருகில் இருந்த மகிழுந்து தரிப்பிடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டதாக வெளிவந்த நிழல்ப்படங்கள் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் பல மாநில தலைவர்கள் பயங்கர அதிர்ச்சியில் இருப்பதாகவும் உடனே தமது மாநில படையினரை மாநிலம் திரும்புமாறும் கட்டளை இடப்பட்டதாக கூறப்படுகிறது.

பதவியேற்ற குறுகிய நேரத்திலையே இந்த சம்பவத்துக்காக அரச தலைவர் பகிரங்க மன்னிப்புக் கோரியதாகவும், அப்படை வீரர்களை அமெரிக்காவின் முதல்பெண் என்ற மதிப்பு மிக்க பெண்மணியான திருமதி பைடன் உடனடியாக அப்பகுதியில் தரித்து நின்ற படையினரை சந்தித்து அவர்களுடன் உரையாடியதோடு மட்டுமல்லாது வெள்ளைமாளிகையில் இருந்து கொண்டு வந்த உலருணவுப் பொருட்களை பகிர்ந்து கொண்டதாகவும் நேற்று செய்தி ஒன்றை பார்த்தேன். இது நியமும் கூட, 

அப்போது தான் எனக்கு பழைய நினைவுகள் வந்து மனதை நிறைத்து நின்றது. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு, விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மௌனிக்கும் வரை எமது மக்கள் எம் போராளிகளை எப்படி பாதுகாத்தார்கள் என்பதை நினைவுக்கு கொண்டு வந்தது என் நினைவகங்கள். 

நிகழ்வு :1 

இதை அழகாக கப்டன் மலரவன் தனது போர் நாவலான போருலாவில் ஒரு இடத்தில் அழகாக குறித்திருப்பார். 

அதாவது மணலாறுக் காட்டில் இருந்து மாங்குளம் நோக்கி பயணித்த அவர்கள் ஒட்டிசுட்டான் பகுதிக்கு சென்ற பொழுதொன்றில் உணவு வழங்கள் வராத நிலையில் பசியோடு படுத்திருந்த போது, அவர்களை ஒரு குழந்தை கண்டு அவர்களோடு கதைத்துவிட்டு ஓடிச்சென்ற மறுகணம் அந்த குழந்தை தாயோடு வருவதைக் காண்கிறார்கள். அத் தாய் குடத்தில் நீரும் கையில் உணவையும் சுமந்தபடி வருவதை காண்கிறார்கள். அத் தாய் தானும் தன் குழந்தைகளும் உணவை உண்ணாமல் இவர்களுக்கு கொண்டு வந்து கொடுத்த போது, தனிய தாம் உண்ண மாட்டோம் தம்மோடு அந்த தாயும் குழந்தையும் சேர்ந்து உணவுண்ண வேண்டும் இல்லை என்றால் தமக்கு வேண்டாம் என்று மறுத்த போராளிகளை உண்ண வைத்து உபசரித்து புன்னகைத்த அந்த தாயின் உணர்வுக்கு ஈடேது. 

நிகழ்வு : 2 

இந்திய வல்லாதிக்க படைகள் அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழம் வந்து கொடூரங்களை செய்த காலம், மணலாறு காடு எம் தலைவனையும் தளபதிகளையும் போராளிகளையும் தாங்கத் தொடங்கிய காலம், போராளிகளுக்கான அடிப்படை தளவமைப்பு பணிகளை செய்வதற்காகவும், விடுதலையை வீச்சாக்கிய போராளிகளுக்கு உறுதுணையாகவும் தனது குடும்பத்தை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் விட்டு மணலாறு காட்டுக்குள் உள்ளே வந்தார் லெப். கேணல் நவம் அவர்களின் தந்தை. அங்கே இராணுவ ஆக்கிரமிப்புக்கும் தாக்குதல்களுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு போராளிகளுக்கான பணிகளை செய்து வந்தார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது. 

இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது.

அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் .

நிகழ்வு : 3 

குடாரப்பு தரையிறக்கத்தின் மூலமாக யாழ்ப்பாணத்தில் கால் பதித்த விடுதலைப்புலிகள் தரைவழியாக ஆனையிறவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பெரும் ஊடறுப்பு ஒன்றை செய்த காலப்பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை “பகிரப்படாதபக்கங்கள் “ பொத்தகம் தாங்கி நிற்கின்றது.

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று. “

அதாவது, ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும். 

என்ற குறளின் அர்த்தத்தை தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கும் இந்து மத குரு ஒருவர், எம் போராளிகளுக்காக, அதுவும் சிக்கல் நிறைந்த அந்த சண்டைக்கள சூழலில் நின்று கொண்டு, 

தம்பியாக்கள் டேய், இந்த கோழியை நான் கொல்லவும் மாட்டன் வெட்டவும் மாட்டன் ஆனால் வெட்டி தந்தால் வடிவா சமைச்சுத் தருவேன். உணவில்லாமல் இந்த உலருணவோட எப்பிடி சண்டை செய்ய போறீங்கள். என்று கூறி அவர்களூடாக வெட்டிய கோழியை தரமான கறியாக சமைத்துக் கொடுத்து உண்ண வைத்து அம் மருத்துவப் போராளிகளை போருக்கு திடமாக்கிய அக்குரு 2 நாட்களுக்குள்ளாகவே கிபிர் விமானத்தின் தாக்குதலில் சாவடைந்த கொடுமையின் வலிக்கும் ஈடு ஏது? 

நிகழ்வு : 4 .....  (இவ்வாறு பல நிகழ்வுகள் உண்டு, தெரிந்தவர்கள் பகிருங்கள். இக்கட்டுரையை முழுமைப் படுத்துவோம். )

எழுதியது: இ.இ கவிமகன்

நாள்: 24.01.2021 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.