வல்லினம் 2 - கோபிகை!!


விறாந்தைக்கு அருகில் இருந்த அறையில், சிவகாமி அம்மாவின் இருமல் ஒலி கேட்டது, இரவிரவாக அவ இருமிக்கொண்டுதான் இருந்தா, ஒரு முறை அவளும் எழுந்துசென்று பார்த்துவிட்டுத்தான், வந்தாள், 

"இது சாதாரணமா வாற இருமல்தானே, நீ போய்ப்படு" என்று அவளை அனுப்பிவிட்டார், "இசைஅரசி அக்கா நிறைய நேரம் அம்மாவோட இருந்திருப்பா, அதுதான் நல்லா அசந்து நித்திரை கொள்ளுறா" நினைத்தபடியே எழுந்து வெளியே சென்றாள் ஆரபி. 

அது மார்கழி மாதம் என்பதால் சில்லென்று பனித்துளிகள் புல்லின் மேலே படர்ந்து இருந்தன. ஆரபிக்கு எப்பவுமே புல்லில இருக்கிற பனித்துளியை பாக்கப் பிடிக்கும், அதில கையை வைச்சு விளையாடுறது பிடிக்கும், நிலத்தில காலை வைக்கும் போது அதன் குளிர்பட்டு உடல் சிலிர்ப்பது பிடிக்கும், வெறுங்காலோடு மெல்ல மெல்ல நடந்து கிணற்றடியை அடைந்தாள். 


கிணற்றுக்கு அருகில் நிழல் தருவதற்காய் வளர்ந்து செழித்து நின்ற பூவரசு மரம் மொட்டும் பூவுமாய் தளதளவென நின்றது. அடித்தூரில் அமர்ந்துகொண்ட ஆரபி, பற்பொடியை கையில் கொட்டி அமர்ந்தபடியே பல்துலக்கத் தொடங்கினாள். பொழுது மெல்ல புலரத் தொடங்கியது, மெல்லிய வெளிச்சம் பரவ நிலம் தெரிந்தது. 


கிணற்று கட்டுக்கு அருகில் நின்ற மஞசள் பூவெல்லாம் பனித்துளி படர்ந்திருந்தது, அலைபேசியின் வெளிச்சத்தில் பளிங்குபோல பளபளத்தன பூக்கள். ஒரு சிறு கிளையை அருகில் வளைத்து முகத்தில் உரசினாள். அந்த இதம் மனதில் இனித்தது, இயற்கை மீது அவளுக்கு கொள்ளை பிரியம். இயற்கையை நேசித்தவனைத்தானே அவளும் நேசித்தாள். நேசித்துக் கொண்டிருக்கிறாள்…


கிணற்று வாளியை சர்ரென்று கப்பியில் இறக்கி தண்ணீரை அள்ளி அருகிலிருந்த தகர வாளியில் ஊற்றினாள். உடலெங்கும் பரவிய இதமான குளிரில் உடல் சற்று நடுங்கவே செய்தது. அவசரமாய் முகத்தைக் கழுவிக்கொண்டு, வீட்டிற்குள் வந்தாள். 

சாம்பல் படர்ந்திருந்த அடுப்பை, சுத்தமாக்கியவள், பனிபட்டால் எரியாது என்று இராத்திரியே அவள் எடுத்துக்கொண்டு வைத்திருந்த சுள்ளியை அடுக்கி அடுப்பைப் பற்றவைத்தாள். 


கேத்தலில் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு. கைகள் இரண்டாலும் முழங்காலைக் கட்டிக்கொண்டு அடுப்பருகில் அமர்ந்துகொண்டாள். குளிருக்கு அந்தச் சூடு இதமாகத்தான் இருந்தது. கைகளை விரித்து அடுப்பில் காட்டினாள். விரல்கள் சூடுபட்டதும் சுருங்கிக்கொள்வது போல உணர்ந்தாள். 

ஸ்ஸ்ஸ்.......எனற இரைச்சலுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் அவசரமாய் எழுந்து, மேலே இருந்த நெஸ்ரமோல்ற் டப்பாவைத் திறந்தாள். காலியாக இருந்தது. 

"அட...அம்மாவுக்கு ஆத்துற மா முடிஞ்சுது போல, மனதிற்குள் நினைத்தவளாக தேயிலை டப்பாவை எடுத்து வெறும் சாயம் கலந்த தேநீரை ஊற்றினாள். பால் கறந்தபிறகு பிள்ளைகள் குடிக்கட்டும், என நினைத்துக்கொண்டே, நான்கு கப்புகளை எடுத்து வைத்தாள். 

அம்மாவுக்கும் கொட்டகைக்குள் உறங்கும், அந்த வீட்டின் கடைசி வாரிசான சீராளனுக்கும் முதலில் கொடுத்துவிட்டு வருவோம் என எண்ணியபடியே எடுத்துக்கொண்டு எழுந்தாள். முதலில் அம்மாவின் அறையில் எட்டிப் பார்த்து, 

"அம்மா...." எனறாள். 


தொடரும் .......


கோபிகை

தமிழருள் இணையத்தளம்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.