தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்!


 சில தனியார் வைத்தியசாலைகளில் சுகாதார அமைச்சின் எவ்வித அனுமதியுமின்றி பிரதேச மட்டத்தில் சிறிய ஆய்வுக்கூடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக Covid - 19 வைரஸ் பரவலைத் தடுக்கும்  தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இராணுவத்தளபதி மேலும் தெரிவிக்கையில், ஆன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு வருகின்றவர்களை அவர்களது அறிக்கை வரும் வரையிலும் குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருப்பது தனியார் வைத்தியசாலைகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுவதில்லை என்றும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என்றும் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து தப்பியோடி ஏனையவர்களுக்கும் வைரஸ் பரவும் வகையில் பல்வேறு இடங்களில் மறைந்திருக்கின்ற காரணத்தினால் வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தோல்வியடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Covid – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில், தனியார் துறை மருத்துவ உயர் நிர்வாக பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சில தனியார் வைத்தியசாலைகளில், சுகாதார அமைச்சின் எவ்வித அனுமதியுமின்றி பிரதேச ரீதியாக உள்ள சிறிய ஆய்வு கூடங்களில் பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி இது போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட 30 ஆய்வுக் கூடங்களுக்கு மட்டுமே சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேலும், இப்பரிசோதனைக்காக தனியார் துறையினர் ரூ. 6,750 கட்டணத்தை அறிவிடுவதுடன், 21 நாட்களில் மட்டும் 18,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான பரிசோதனைக்காக மக்களிடம் அறவிடப்படும் தொகையை குறைப்பது மேலும் சிறந்ததாகும். அத்துடன் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் இராணுவத்தளபதி ஆய்வுகூடங்கள் உயர் நிர்வாக பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கொவிட் வைரஸ் பரிசோதனைகளுக்கான வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளை மிகவும் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும், தவறான வழிமுறைகளை பின்பற்றாது பரிசோதனை முறைகளை உரிய மட்டத்தில் நம்பிக்கையுடன் உறுதிப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன வைத்திய ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.