கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து கெஜ்ரிவால் கருத்து!


டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து 2.74 இலட்சம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து வந்துள்ளது.

இதில் 1.2 இலட்சம் டோஸ்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்துவற்கு பயன்படுத்தப்படும். 2.4 இலட்சம் வரையிலான சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

முதலில் 81 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதன்பின்னர் படிப்படியாக 175 மையங்களாகவும் பின்னர் 1,000 மையங்களாகவும் அதிகரிக்கப்படும். இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் 100 தடுப்பூசிகள் வரை வழங்கப்படும்.

தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்தில் நான்கு நாட்களில் நடைபெறும். திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமையில் தடுப்பூசி போடப்படும். மற்ற நாட்கள், பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்துவதற்காக ஒதுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி திட்டம் காரணமாக பிற நோய்களுக்கான தடுப்பூசி அட்டவணைகள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நமது தேவைக்கேற்ப அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒரு வருடமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி வருகையால், நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.