குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது!


முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு,  தற்போது புத்தர் சிலை  வைக்கப்பட்டு பௌத்த வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தமிழர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932 இல் பிரசுரிக்கபட்ட வர்த்தமானியில் இந்த ஆலயம் இருந்ததாக தெரிவித்து இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜெயவர்த்தனபுர தொல்லியல் பீடம், இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வுகளை செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக அங்குள்ள தமிழ் மக்கள் கூறியுள்ளதாவது, “இன்னும் சில மாதங்களிலோ வாரங்களிலோ இங்கிருந்து பௌத்த கல்வெட்டுகளும் சிதைவுகளும் மீட்கபட்டன என சொல்லப்படலாம். இங்கே பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டு ஒரு பௌத்த விகாரையும் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆகவே இவ்விடயத்தில் தமிழ் பிரதிநிதிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.