குளங்களில் தங்கூசி வலையின் பாவனை அதிகரிப்பு!!
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நன்னீர் மீன்பிடி வாவி மற்றும் குளங்களில் தங்கூசி வலையின் பாவனை அதிகரித்துள்ளது. தற்போது பருவ காலத்தினால் வாவி குளங்களில் மீன்பிடித்தொழில் அதிகரித்துள்ளதுடன் சட்டவிரோதமான தங்கூசி வலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக காரைதீவு ,நிந்தவூர், மாவடிப்பள்ளி ,சம்மாந்துறை ,மத்தியமுகாம், நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இவ்வலைகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் இவ்வலை பாவனை கடற்தொழில் நீரியள் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்நடவடிக்கைகள் எதுவும் தற்போது மேற்கொள்ளாமையினால் மீண்டும் தங்கூசி வலை பாவனை அதிகரித்துள்ளதாக பாதிக்கப்ட்ட மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தங்கூசி வலை பாவனையினால் பிளாஸ்டிக், பொலித்தீன் பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட தங்கூசி பல வகையில் நிலத்திலும் கடலிலும் ஏற்படுத்துகிறது.தவிர, தங்கூசிவலை விரித்து வைக்கப் பட்டிருக்கும்போது நீரோட்டத்தின் வேகத்தில் ஒருவகை விண் கூவுவது போன்ற ஒலியை ஏற்படுத்துகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மிரட்சியடைந்து அந்தப் பகுதியை விட்டே வேறு பிரதேசங்களுக்குக் குடி பெயர்ந்து விடுகின்றன.
அடுத்து, மிகவும் குறுகிய விட்டத்தைக் கொண்ட தங்கூசி வலைகளைப் பாவிப்பதால் மிகச் சிறு மீன்களும் அகப்பட்டு மடிந்து, காலக் கிரமத்தில் அழிந்து விடுகின்றன.கைவிடப்படும் இந்த வலைகளால் பல நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன.
தரையில் இவற்றைக் கைவிடுவதால் நிலவளம் பாதிக்கப் படுவதுதோடு, நிலத்தில் வாழும் ஊர்வன, பறவையினம் போன்றவற்றின் அழிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன.
மேலும் தங்கூசி வலை பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு தங்கூசி வலையுடன் கைது செய்யப்படுவோர் மீது நீரியல் வள திணைக்களத்தினால் சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை